2011-03-04 16:29:40

கத்தோலிக்கரும் யூதரும் உலகில் சமய சுதந்திரத்தைக் காப்பதற்கு உறுதி


மார்ச் 04,2011. உலகில் சமயத் தீவிரவாதத்திற்கெதிராகச் செயல்படவும், நீதி, ஒருமைப்பாடு, ஒப்புரவு, அமைதி ஆகியவைகளை ஊக்குவிக்கவுமான நடவடிக்கைகளில் கத்தோலிக்கர்களும் யூதர்களும் ஒன்றிணைந்து உழைப்பதற்கு உறுதி எடுத்துள்ளனர்.
கத்தோலிக்க-யூத மதங்களுக்கிடையேயான உரையாடலில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அனைத்துலக கத்தோலிக்க-யூதப் பணிக்குழுவின் நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்யும் நோக்கத்தில் பாரிசில் நான்கு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இவ்விரண்டு மதங்களின் பிரதிநிதிகளும் உலகில் சமய சுதந்திரத்தைக் காப்பதற்கானத் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டுள்ளனர்.
உலகில் சிறுபான்மை மதத்தவர் எதிர்நோக்கும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்தத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த இந்தப் பிரதிநிதிகள், வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளின் சனநாயக ஆதரவு இயக்கங்களுக்கானத் தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
இளம் தலைமுறைகள், தங்கள் சமூகங்களில் உண்மையான சுதந்திரமும் முழுமையானப் பங்கெடுப்பும் கொண்டு வாழ்வதற்கு அவர்களைத் தயாரிக்க விரும்புவதாகவும் இப்பிரதிநிதிகள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தக் கூட்டம், இந்தப் பிப்ரவரி 27 முதல் இம்மாதம் 2 வரை நடைபெற்றது. இந்தப் பணிக்குழுவில் திருப்பீட யூதமத உறவுகளுக்கான அவை நியமித்த கத்தோலிக்கப் பிரதிநிதிகளும் 11 யூதமத நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.