2011-03-03 15:34:50

பயிற்சி முடித்த விடுதலைப் புலிகள் விடுவிப்பு


விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்ட மூன்று இளம் பெண்கள் உட்பட 106 பேர் சிவராத்திரியை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு ஆணையளாரின் விசேட ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 26 இளம் பெண்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பயிற்சிகளுக்கு லீட்ஸ் எனப்படும் தொண்டு நிறுவனம் உதவித்தொகைகளை வழங்கியிருந்தது. துறைசார்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை இலங்கையின் வடமாநில கல்வி அமைச்சு வழங்கியிருந்ததாக அரசு அதிகாரி செல்வி ஜெயா தம்பையா கூறினார்.
இந்த இளம் பெண்கள் சமூகத்தில் நம்பிக்கையோடு இணைவதற்கு வசதியாக முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்ததாக லீட்ஸ் நிறுவனம் கூறுகின்றது.
இதற்கிடையில் இன்னும் 4500 பேர் புனர்வாழ்வு மையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும். அவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவர் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த இரணசிங்க பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.