2011-03-03 15:28:38

திருத்தந்தை எழுதியுள்ள ஒரு புதிய நூல் மார்ச் மாதம் 10ம் தேதி வெளியாகும்


மார்ச் 03,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதியுள்ள ஒரு புதிய நூல் மார்ச் மாதம் 10ம் தேதி வருகிற வியாழனன்று வெளியாகும். நாசரேத்தின் இயேசு: புனித வாரம் - எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரை (Jesus of Nazareth: Holy Week -- From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பில் வெளியாகும் இப்புத்தகம் இயேசுவைக் குறித்து திருத்தந்தையின் எண்ணங்களைத் தாங்கி வரும் இரண்டாம் நூல்.
இயேசு கிறிஸ்துவைக் குறித்து திருத்தந்தை எழுதிய முதல் நூல் 2007ம் ஆண்டு வெளியானது. மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்புதிய நூல் இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படும். வத்திக்கான் வெளியீட்டகம் இத்தாலிய மொழியிலும், Ignatius அச்சகம் ஆங்கிலத்திலும் வெளியிடும்.
ஒன்பது பிரிவுகளைக் கொண்ட இந்நூலில் இயேசுவின் எருசலேம் நுழைவு மற்றும் ஆலயத்தைச் சுத்தம் செய்தல் ஆகிய நிகழ்வுகள் முதல் பிரிவில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இயேசுவின் பாடுகளின் பல நிலைகள் குறித்தும் இறுதிப் பிரிவில் இயேசுவின் உயிர்ப்பு குறித்தும் திருத்தந்தை தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டையொட்டி நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouelletம் ஜெர்மானிய எழுத்தாளர் Claudio Magrisம் கலந்து கொள்வர்.
திருத்தந்தையின் இப்புதிய நூல் ஜெர்மானிய, பிரெஞ்ச், போர்த்துகீசிய மற்றும் போலந்து மொழிகளிலும் விரைவில் வெளியிடப்படும் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.