2011-03-03 15:25:50

சிலே அரசுத்தலைவர் பினேரா, திருத்தந்தை சந்திப்பு


மார்ச்03,2011. தென் அமெரிக்க நாடான சிலே அரசுத்தலைவர் செபஸ்டியான் பினேரா எகெனிகெவை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் 25 நிமிடம் நடந்த இச்சந்திப்பில், சிலே நாட்டில் மனித வாழ்வையும் குடும்பத்தையும் பாதுகாத்தல், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுதல், வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், மனித உரிமைகளை மதித்தல், சமூகத்தில் நீதியையும் அமைதியையும் பாதுகாத்தல் ஆகிய தலைப்புகள் இடம் பெற்றன..
இந்த நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இலத்தீன் அமெரிக்காவின் இன்றையச் சூழல் பற்றியும் பேசிய அவர்கள், மனிதர் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அடிப்படையான விழுமியங்களை ஊக்குவிப்பதில் சிலே அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான புரிந்துணர்வுகள் குறித்தும் கலந்து பேசினர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் சிலே அரசுத்தலைவர் பினேரா.







All the contents on this site are copyrighted ©.