2011-03-02 15:33:12

பாகிஸ்தான் அமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கு வத்திக்கான் கடும் கண்டனம்


மார்ச் 02,2011. பாகிஸ்தான் மத்திய அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ அமைச்சராக இருந்த Shabbaz Bhatti சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்து வத்திக்கான் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிறுபான்மைத் துறை அமைச்சரான 42 வயது கத்தோலிக்கர் Shabbaz Bhatti இப்புதன் உள்ளூர் நேரம் பகல் 11.20 மணியளவில் தனது வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியவுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளுடன் அவரின் வாகனத்தைச் சூழ்ந்து குண்டுகளைச் சரமாரிச் சுட்டதில் அவர் இறந்தார்.
இந்த வன்முறை, "வலிமைமிக்கக் கொடுஞ்செயல்" என்று கூறியத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி, அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் ஆபத்து குறித்து திருத்தந்தை கொடுத்து வரும் எச்சரிகைகள் இச்செயல் மூலம் முழுவதும் நியாயப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
கொல்லப்பட்டுள்ள அமைச்சர் Shabbaz Bhatti கடந்த செப்டம்பரில் திருத்தந்தை 16ம் பெனடிக்டை வத்திக்கானில் சந்தித்தார் என்றும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் சமயக் குழுக்கள் மத்தியில் அமைதி நிறைந்த உறவுகளைக் கட்டி எழுப்பத் தன்னை அர்ப்பணிக்க இவர் உறுதி வழங்கினார் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.பாகிஸ்தானில் "வன்முறை மற்றும் அடக்குமுறைகளிலிருந்து" கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுமாறும் அவர்களின் சமய சுதந்திரம் காக்கப்படுமாறும் திருப்பீடப் பேச்சாளர் அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.