2011-03-02 15:53:16

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


மார்ச் 03, 2011. உரோம் நகரம் இரண்டு நாட்களாக மழையை அனுபவித்து வந்தாலும், இப்புதனன்று திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தைக் கேட்க வந்த கூட்டத்திற்குக் குறைவில்லை. இங்கிலாந்து, அயர்லாந்து, ஃபிரான்ஸ், டென்மார்க், ஃபின்லாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இஸ்பெயின், அர்ஜென்டினா, போலந்து, குரொவேஷியா, செக் குடியரசு, இஸ்லோவாக்கியா, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த ஏறத்தாழ 7000 திருப்பயணிகள் திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தை நிறைத்திருக்க, அவர்களுக்கு புனித ஃபிரான்சிஸ் டி சேல்ஸ் குறித்து தன் போதனைகளை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
திரிதெந்து பொதுச்சங்கத்திற்குப் பின்னான காலத்தில் ஆன்மீக வாழ்விற்கு முதன்மையானவராகவும், குறிப்பிடும் வகையிலான உயரிய ஆயராகவும் விளங்கிய புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் குறித்து இன்றைய நம் மறைபோதகத்தில் காண்போம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை. இளவயதிலேயே இறைவனின், விடுதலை தரும் அன்பின் சக்திநிறை அனுபவத்தைக் கொண்ட பின், குருவாகவும் பின்னர், கால்வினிசக் கொள்கைகளின் உறுதியான பிடியிலிருந்த ஜெனிவாவின் ஆயராகவும் ஆனார் புனித பிரான்சிஸ். அவரின் உயரிய கல்வி, அவரின் பிறரன்பின் தனிப்பட்டக் கொடைகள், சாந்தம், பேச்சுவார்த்தைகளுக்கான மனம் திறந்த நிலை மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக செயல்பட்ட அவரின் பெருந்திறமை ஆகியவை அவரை அவர் காலத்தின் முக்கிய நபராக உருவாக்கின. அனைவரும் புனிதத்துவத்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வலியுறுத்தலுக்கு முன்னோடிபோல், அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள வாழ்க்கை நிலையிலேயே முழுமை காணவேண்டும் என அழைக்கிறது புனித பிரான்சிஸின் ஆன்மீக எழுத்துக்களுள் ஒன்றான 'பக்தி வாழ்வுக்கான முன்னுரை' என்பது. 'கடவுளின் அன்பு குறித்த ஆய்வுக்கட்டுரை' என்ற அவரின் ஏடு, முன் கூறிய கருத்தையே விரிவாக எடுத்துரைப்பதுடன், நாம் நம்மையும் நம் உண்மை சுதந்திரத்தையும் இறைவனின் அன்பிலேயே கண்டுகொள்ளமுடியும் என்பதை வலியுறுத்துகிறது. புனித பிரான்சிஸ் டி சேல்ஸின் கிறிஸ்தவ மனிதாபிமானமானது இன்றும் தன் எவ்வித இயைபுகளையும் இழந்துவிடாமலேயே நிற்கிறது. பெரும் புனிதரும் திருச்சபை வல்லுனரும் ஆன இவரின் எடுத்துக்காட்டு, இறைவனின் அன்பிலிருந்து பிறக்கும் சுதந்திரம் மற்றும் மகிழ்வில் நம் முழு நிறைவை கண்டு கொள்ள உதவுவதாக. புனிதத்துவத்திற்கான நம் தேடலில் இவரே நமக்கு வழி காட்டுவாராக.
இவ்வாறு தன் இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய நம் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.