2011-03-02 15:33:33

ஆள்வோரின் கட்டுப்பாட்டுக் கருவியாக கல்வி செயல்படக்கூடாது - வத்திக்கான் அதிகாரி


மார்ச் 02,2011. மனித மாண்பில் ஊன்றப்படாமல், மதம் மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பீடுகளை மதிக்காமல் வழங்கப்படும் கல்வி, அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆள்வோரின் கட்டுப்பாட்டுக் கருவியாக மட்டுமே செயல்படும் என்று வத்திக்கான் அதிகாரி கூறினார்.
பெண்களின் தற்போதைய நிலைக்கான ஐ.நா. கழகத்தின் கூட்டமொன்றில் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்டின் சார்பாக, இத்திங்களன்று பேசிய Jane Adolphe, பெண்களுக்குரிய கல்வியின் அவசியத்தைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இறைவன் வகுத்துள்ள பல இயற்கை விதிகளில் பொதிந்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாகும் கல்வியே மனித குலத்திற்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்று Adolphe எடுத்துரைத்தார்.
கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை துவங்கி, சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைக்கப்படும் பல்வேறு வன்முறைகளிலிருந்து இவர்களைக் காப்பதற்கு திருச்சபை அளித்துள்ள பல்வேறு கருத்துக்களை மனதில் கொள்வது நல்லதென்று அவர் சுட்டிக் காட்டினார்.பெண்களின் முன்னேற்றத்திற்கென இவ்வெள்ளி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பேசிய திருப்பீட அதிகாரி Jane Adolphe, கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளைக் குறித்து வலியுறுத்திப் பேசினார்.







All the contents on this site are copyrighted ©.