2011-03-02 15:33:47

அன்பு, மனித மாண்பு இவைகளின் அடிப்படையில் இளையோர் வளர்க்கப்பட்டால், வருங்காலம் உறுதியான வகையில் அமையும் - ஸ்பெயின் நாட்டின் கர்தினால்


மார்ச் 02,2011. உறுதியான கிறிஸ்தவ குடும்பங்களைச் சார்ந்தே எதிர்கால சந்ததிகள் அமைந்துள்ளன என்று கர்தினால் Antonio Maria Rouco Varela கூறினார்.
ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளையொட்டி, அண்மையில் ஸ்பெயின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தியக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய அப்பேரவையின் தலைவரும், மத்ரித் பெராயருமான கர்தினால் Varela இவ்வாறு கூறினார்.
மனித அன்பு, மனித மாண்பு இவைகளின் அடிப்படையில் குடும்பங்களிலும் பள்ளிகளிலும் பங்குத் தளங்களிலும் சிறுவயது முதல் நமது இளையோர் வளர்க்கப்பட்டால், வருங்காலம் உறுதியான வகையில் அமையும் என்று கர்தினால் Varela சுட்டிக் காட்டினார்.
பள்ளிக் கல்வியில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அக்கறை காட்டவில்லையெனில், பள்ளிகளில் தரப்படும் கல்வியின் தரம் வெகுவாக குறைந்து விடும் என்றும், குடும்பம், பள்ளி, பங்கு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து உழைப்பதே வருங்காலத்தை வடிவமைக்கும் என்றும் கர்தினால் வலியுறுத்தினார்.தன்னலத்தையே பெரிதுபடுத்தும் இன்றைய உலகில் தவிக்கும் இளையோருக்கு அன்பை அடித்தளமாய் கொண்ட குடும்ப வாழ்வே உறுதியாக அமையும் என்று எடுத்துச் சொல்வது அனைவரின் கடமையாகிறது என்று கர்தினால் Varela எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.