2011-02-28 15:21:56

கடவுள் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு


பிப்.28,2011. கடவுளின் எல்லையற்ற அன்பில் வைக்கப்படும் நம்பிக்கை மாண்புடன்கூடிய வாழ்க்கைக்கான நமது போராட்டத்தை எடுத்து விடாது, ஆனால் இவ்வுலகப் பொருட்களின் மீதானப் பற்றுகளிலிருந்தும் எதிர்காலம் குறித்த பயத்தினின்றும் விடுதலை அளிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள் அவரது அரசையும் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதையும் முதலிடத்தில் வைப்பார்கள்" என்றுரைத்து இத்தகைய போக்கு விதியின்மீது வைக்கும் நம்பிக்கைக்கு மாறானது என்றார்.
இயேசுவின் இந்தப் போதனை எப்போதும் எல்லாருக்கும் ஏற்றது எனினும், இயேசுவைப் போல விண்ணகத் தந்தையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதில் கிறிஸ்தவர் தனியாகப் பிரித்துக் காட்டப்படுகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
தந்தையாம் இறைவனுடன் கொண்டுள்ள உறவு கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும் பொருள் கொடுக்கின்றது என்ற அவர், இவ்வுலகில் வாழும் பொழுது அயலாரின் தேவைக்கு கவனமாக இருந்து, அதேசமயம் இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வாழ்வதன் அர்த்தத்தையும் இயேசு விளக்கியிருக்கிறார் என்று கூறினார்.
பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற எசாயா பகுதியையும் குறிப்பிட்ட திருத்தந்தை, வானத்துப் பறவைகளுக்கு உணவளித்து வயல்வெளி மலர்களைப் போர்த்தும் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இயேசு தம் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்








All the contents on this site are copyrighted ©.