2011-02-26 15:57:25

லிபிய ஆயர் முஸ்லீம்களிடம் பாதுகாப்புக் கோருகிறார்


பிப்.26,2011. கடும் பதட்டநிலைகள் இடம் பெற்று வரும் லிபியாவில், அந்நாட்டின் சிறுபான்மைக் கத்தோலிக்கருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு லிபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியான திரிப்போலி ஆயர் ஜொவான்னி மார்த்தினெல்லி முஸ்லீம்களிடம் கேட்டுள்ளார்.
லிபியாவை சுமார் 42 வருடங்களாக ஆட்சி செய்து வரும் முமாமர் கடாஃபிக்கு எதிராக இடம் பெற்று வரும் போராட்டங்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் கடுமையாய் இருப்பதாகவும், லிபியத் தெருக்களில் ஓடும் இரத்தம் அந்நாட்டில் பொதுவான ஒப்புரவுக்குத் தடையாக இருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி தெரிவித்தார்.
"La Stampa" என்ற இத்தாலிய செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த ஆயர் மார்த்தினெல்லி, தற்போதைய மக்கள் புரட்சி 1968ம் ஆண்டில் இடம் பெற்ற புரட்சியை ஒத்தது என்றும், குடியிருக்க வீடின்றியும் அதனால் குடும்பங்களை அமைப்பதற்கு இளையோர் கஷ்டப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
கத்தோலிக்க ஆலயங்கள், துறவு இல்லங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு செம்பிறைச் சங்கம் மற்றும் பிற முஸ்லீம் அமைப்புக்களிடம் கேட்டிருப்பதாகவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
2005ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி லிபியாவில் சுமார் எழுபதாயிரம் கத்தோலிக்கரும் 8 குருக்களும் 30 அருட்சகோதரிகளும் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.