2011-02-26 15:58:27

கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்


பிப்.26,2011. லிபியாவில் கடாஃபி அரசுக்கு எதிராக உடனடியாகத் திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் ஐ.நா.பாதுகாப்பு அவையைக் கேட்டுள்ளார்.
கடாஃபி அரசு, போராடுகிறவர்கள் மீது, இறப்பை வருவிக்கும் கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் இச்சூழல்களில் நேரத்தைக் கடத்தினால் அதிகமான மனித உயிர்களை இழக்க நேரிடும் என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவும் நோக்கத்தில் தலைநகர் திரிப்போலியில் ஆயுதக் கிடங்குகளை அமைக்கவிருப்பதாகக் கடாஃபி அறிவித்துள்ளதையொட்டி உள்நாட்டுக் கலவரம் மூளும் என்ற அச்சமும் நிலவுகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன. லிபியாவின் சுமார் 65 இலட்சம் பேரில் 20 இலட்சம் பேர் திரிப்போலியில் வாழ்கின்றனர்.
ஐ.நா.பாதுகாப்பு அவையும், லிபியாவுக்கு எதிரான ஆயுதத் தடை, போக்குவரத்துத் தடை மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கு சிந்தித்து வருகிறது.
திரிப்போலியில் இவ்வெள்ளியன்று மட்டும் ஆயிரம் பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இவ்வெள்ளியன்று கூடிய ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு, லிபியத் தலைவர் கடாஃபிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்விவகாரத்தில் உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இன்னும், கடாபியின் சொத்துக்களை சுவிஸ் வங்கி முடக்கியிருக்கிறது







All the contents on this site are copyrighted ©.