2011-02-25 15:36:38

வத்திக்கான் அதிகாரி : தண்ணீர் ஒவ்வொருவருக்கும் உரிய, உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது


பிப்.24,2011. நீர் வளங்கள், தனிப்பட்டவரின் சொத்தாகவும் முழுவதும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலும் நிர்வகிக்கப்படக் கூடாது, மாறாக, இவை உலகளாவிய தன்மையையும் மாற்றிக் கொடுக்கப்பட முடியாத உரிமையையும் கொண்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Greenaccord என்ற இத்தாலிய அமைப்பு, “எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடு” என்ற தலைப்பில் உரோமையில் இவ்வியாழனன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைச் செயலர் ஆயர் மாரியோ தோசோ (Mario Toso) இவ்வாறு கூறினார்.
கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கானா போன்ற நாடுகளின் தலைநகரங்களில் தனியார் விநியோகிக்கும் தண்ணீரின் விலை, நியுயார்க், இலண்டன் போன்ற நகரங்களின் தண்ணீர் விலையைவிட மூன்று முதல் ஆறு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்ட ஆயர் தோசோ, தண்ணீர், வியாபாரப் பொருள் அல்ல, மாறாக இது ஒவ்வொருவருக்கும் உரியது, இது உலகளாவிய உரிமையைக் கொண்டுள்ளது என்றார்.
இன்று உலகில் சுமார் நூறு கோடிப் பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது, புவி வெப்பமடைந்து வருவதால் இவ்வெண்ணிக்கை 2050ல் மேலும் 280 கோடியாக உயரும், உலக அளவில் சுத்தமான நீரைப் பயன்படுத்தும் தேவை 5 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்பதால் 2025ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்குவர், இவர்களில் பாதிப்பேர் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்றும் ஆயர் எச்சரித்தார்.
இதனால் ஏற்படும் மோசமான சுகாதாரச் சூழல்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 18 இலட்சம் சிறார் இறக்க நேரிடும் என்றும் ஆயர் தோசோ தெரிவித்தார்.
தண்ணீர் மக்கள் நலமாக வாழ்வதற்கு வழி செய்வதால், இதற்கான உரிமை மற்ற அடிப்படை உரிமைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றது என்று கூறிய திருப்பீட அதிகாரி, நீர் வளங்கள் சரியாக நிர்வகிக்கப்படுவதற்குச் சர்வதேச சமுதாயம் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.