2011-02-25 13:47:22

பிப்ரவரி 26. வாழ்ந்தவர் வழியில்...........


விக்டர்-மாரீ ஹூகோ 1802 பெப்ரவரி 26, பிரான்ஸின் பெசான்சோவில் பிறந்தார்.
தன் 20 வயதிற்குள்ளேயே கவிஞராக தன்னை நிலைநாட்டிக்கொண்டவர் ஹூகோ. எழுத்தாளரும், நாடகாசிரியரும், நாவலாசிரியரும், கட்டுரையாளரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலருமாக புகழ்பெற்று விளங்கினார் அவர். இவர் எழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப்ள் (Les Misérables), நோட்ர-தாம் தி பரி (Notre-Dame de Paris) எனும் நாவல்கள் பிரான்சுக்கு வெளியிலும் புகழ் பெற்றவை.
இவரது எழுத்துக்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டி நிற்கின்றன. இவரின் அரசியல் கருத்துக்களுக்காக மூன்றாம் நெப்போலியனால் 1851ல் நாடு கடத்தப்பட்டு 29 ஆண்டுகளுக்குப் பின்னரே பிரான்ஸ் திரும்பினார். 1876ம் ஆண்டு அரசவையில் செனட்டராக நியமிக்கப்பட்டார். இவரின் இறுதி காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்தவராக மக்களின் பேராதரவுடனும் மதிப்புடனும் வாழ்ந்தார்.
இவர் தன் 83ம் வயதில், 1885ம் ஆண்டு மே மாதம் 22ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் காலமானபோது, நாட்டின் தலைசிறந்த மனிதருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.