2011-02-25 15:55:04

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது


பிப்.24,2011. சி.என்.என். நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தைத் தேர்வு செய்து விருது வழங்கியது. இவ்விருதை, துணை ஜனாதிபதியிடமிருந்து கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.
சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
டில்லியில் இச்செவ்வாயன்று நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.