2011-02-24 15:42:28

புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் - கர்தினால் Antonios Naguib


பிப்.24,2011. இவ்வாண்டின் புத்தாண்டு தினத்தன்று எகிப்தின் அலெக்சாந்த்ரியாவில் காப்டிக் ரீதி கத்தோலிக்கக் கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதலின் பின்புலத்தில் எகிப்து அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று காப்டிக் ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறியுள்ளார்.
30 Giorni என்று அழைக்கப்படும் ஓர் இத்தாலிய நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் இக்கருத்தை வெளியிட்ட கர்தினால் Naguib, அரசுத் தலைவர் Mubarak தனது அரசைக் காக்கும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இவ்வன்முறைத் தாக்குதலைக் காரணம் காட்டியிருப்பார் என்று கூறினார்.
முபாரக்கிற்கு எதிராக எழுந்த போராட்டங்களில் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் வயது வேறுபாடின்றி கலந்து கொண்ட ஒற்றுமையைத் தன் நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின் காண முடிந்ததெனும் மகிழ்வையும் கர்தினால் Naguib வெளியிட்டார்.
இதற்கிடையே, முபாரக் பதவி துறந்ததையடுத்து எகிப்தில் பொறுப்பேற்றிருக்கும் அரசு அந்நாட்டில் நிகழ்ந்த புத்தாண்டு வன்முறை குறித்த வழக்கைத் தீர ஆராய்ந்து தீர்ப்புகள் வழங்க வேண்டுமென்று அகில உலக சமய உரிமைகளுக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குழு USCIRF வலியுறுத்தி வருகிறது.








All the contents on this site are copyrighted ©.