2011-02-23 15:52:12

பிப்ரவரி 24. – வாழ்ந்தவர் வழியில்........,


தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா. ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிப்ரவரி 24 1886 இல் பிறந்தார். இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்து கல்வி பயின்று வந்தார். சில ஆண்டுகளில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தார். பின்னர் இவர் 1907-இல் மலேயா நாட்டுக்குப் புறப்பட்டார்.
சிங்கப்பூரில் டானியல் போதகர் என்பவர், இவரை ரெயில்வே துறையில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வர்த்தக நிறுவனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் தலைமை எழுதுவினைஞராக உயர்ந்து, 1930 வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார்.
இவர் கடமையாற்றிய நிறுவனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது "வி" என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள "வ" வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.
முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாமணி ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு உழைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் அச்சாவதற்கு முன்னரே அவர் காலமாகிவிட்டார்








All the contents on this site are copyrighted ©.