2011-02-22 15:49:10

விவிலியத் தேடல்


RealAudioMP3
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது என்ற திருப்பாடலின் அழகியதொரு வரியில் இது நமது மூன்றாம் விவிலியத் தேடல். இந்த வரி நன்றியுணர்வால் நம் உள்ளங்களை நிரப்பும். அதனால் இந்த உலகமே நமது மனக் கண்களில் அழகாய் மாறும் என்று சென்ற தேடலில் சிந்தித்தோம். இந்த அழகிய கண்ணோட்டத்தை அழிக்கும் வகையில் ஊடகத்துறை காட்டும் இருளான உலகம் உண்மை உலகம் அல்ல; ஊடகங்கள் காட்டும் உலகத்திற்குப் பதிலாக நமது எண்ணங்களில் நன்மை நிறைந்த உண்மையான உலகைப் பார்க்கப் பழகவேண்டும் என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம்.
ஊடகங்கள் காட்டும் உலகைப் பற்றிச் சிந்திக்க கடந்த ஞாயிறு மீண்டும் ஒரு முறை நமக்கு வாய்ப்பு கிடைத்தது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று பழிவெறி கொண்டு திரியும் உலகமே ஊடங்கள் காட்டும் உலகம். இருந்தாலும், மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று இயேசு விடுத்த சவாலை நிறைவேற்றும் மக்களும் இந்த உலகில் உள்ளனர் என்று ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்தோம்.
இவ்விரு நாட்களிலும் நாம் கூறிய எண்ணம் இதுதான். ஊடகம் காட்டும் உலகம்தான் உண்மை உலகம் என்று நாம் நம்பினால் நம் உள்ளம் வெறுப்பில் நிறைகிறது. வெறுப்பு, பகைமை எனும் அமிலம் ஊற்றப்பட்ட பாத்திரமாய் நமது மனம் மாறும்போது, அது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அமிலத்தில் கரைகிறது. இந்தப் போக்கை முறியடிக்க, நமது உள்ளமெனும் கிண்ணத்தில், பாத்திரத்தில் இறைவன் பொழியும் அருள் அமுதத்தை நாம் நிரப்பினால், நம் மனமெனும் பாத்திரம் காப்பாற்றப்படும், மனம் நிறைந்து வழியும்.

திருப்பாடல் 23ன் ஆசிரியர் தாவீது என்று அவ்வப்போது நினைத்துப் பார்க்கிறோம். தாவீது தன வாழ்வைத் திரும்பிப் பார்த்து, அசைபோட்டு எழுதிய பாடல் இது என்றும் சிந்தித்தோம். அவர் திரும்பிப் பார்த்த வாழ்வில் நடந்ததெல்லாமே சுகமான, நலமான நிகழ்வுகள் அல்லவே. அவர் நினைத்திருந்தால், அந்நிகழ்வுகளின் விளைவாக, தன் மனதை வெறுப்பில், பகைமையில், பழி உணர்வில் நிறைத்திருக்கலாம். அவர் அதற்கு மாறாக, தன் வாழ்வை அன்பு, அமைதி என்ற அமுதங்களால் நிறைத்ததால், "என் பாத்திரம் நிறைந்து வழிகின்றது" என்று அவரால் அழுத்தந்திருத்தமாய்ச் சொல்ல முடிந்தது. வெறுப்பில் தன்னை அவர் நிறைத்திருந்தால், திருப்பாடல் 23 என்ற அரும்பெரும் கருவூலத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.

வாழ்வில் நிறைவைக் காண முடியாமல், நன்றி சொல்ல முடியாமல் கசப்புடன் நாம் வாழ்வைக் கழிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு என்று சொல்கிறார் Harold Kushner. வாழ்வில் எப்போதும் மிகச் சிறந்தவைகளே எனக்கு வந்து சேர வேண்டும். அது என் பிறப்புரிமை என்ற எண்ணம் முதல் காரணம். இந்த எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் தங்களுக்கு வரும் பல பரிசுகளையும் நுணுக்கமாக ஆராய்வார்கள். புண்ணியத்திற்குக் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பதம் பார்த்தது போல் ஆராய்வார்கள். அப்பரிசுப் பொருட்களைச் சுற்றியிருக்கும் காகிதம் சிறிது கிழிந்திருந்தாலும் அது நல்ல பரிசல்ல என்று அந்தப் பரிசைப் பிரிக்காமலேயே தீர்மானித்து விடுவார்கள். அல்லது, தங்களுக்கு வந்த பரிசை பிறருக்கு வந்துள்ள பரிசுகளோடு ஒப்புமைப் படுத்துவார்கள். மற்றவர்கள் பரிசு எப்போதும் தங்களது பரிசை விடச் சிறந்ததாக இருப்பதுபோல இவர்களுக்குத் தெரியும். அது இவர்களை ஏக்கத்தில் விட்டுவிடும். தங்கள் கிண்ணம் நிறைந்து வழிந்தாலும், அடுத்தவருடைய கிண்ணம் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வழிகிறதே என்ற ஏக்கமும், பொறாமையுமே இவர்களது மனதில் நிரம்பி வழியும்.
நன்றி கூறமுடியாமல் போவதற்கு இரண்டாவது காரணம்: இவர்கள் தாங்கள் வாழும் உலகில் தாங்கள் மட்டுமே போதும்; அடுத்தவரின் உதவிகள் தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தவர்கள். பிறரிடமிருந்து எதைப் பெற்றாலும், அது தங்களை வலுவற்றவர்களாய் காட்டி விடும் என்ற பயத்தில் வாழும் பரிதாப மனிதர்கள் இவர்கள். தங்கள் மனமென்னும் பாத்திரத்தில் நல்லவைகளை நிறைக்க பிறர் வரும்போது, தங்கள் பாத்திரங்களை மூடி வைப்பார்கள். மற்றவர்கள் என்னதான் முயன்றாலும், மூடிய பாத்திரங்களை நிறைக்க முடியாதே.

நிரம்பி வழியும் பாத்திரம் குறித்து திருப்பாடலின் ஆசிரியர் பேசும் போது, மற்றொரு பாத்திரம் என் நினைவுக்கு வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்த பாத்திரம். பாதி வரை நிரப்பப்பட்ட பாத்திரம். இந்தப் பாத்திரத்தை இருவர் பார்க்கின்றனர். இன்னும் பாதி நிறையவில்லையே என்று ஒருவர் ஏங்குகிறார். அடடே! பாதிவரை நிறைந்துவிட்டதே என்று மற்றொருவர் மகிழ்கிறார். நம்மை மகிழ்வில் அல்லது துயரத்தில் ஆழ்த்துவது வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல; அந்நிகழ்ச்சிகளைக் காணும் நம் கண்ணோட்டம் என்ற உண்மையைக் கூறும் உவமை இது. பாதி வரை நிறைந்துள்ள பாத்திரம் வெளியில் இருக்கும் எதார்த்தம். அதைப் பார்க்கும் பார்வையால் நமக்குள் உண்டாகும் ஏக்கம், எதிர்பார்ப்பு அல்லது நிறைவு, மகிழ்ச்சி ஆகியவை உள்ளே இருக்கும் எதார்த்தம்.

வானிலை அறிக்கைகளைத் தினமும் கேட்கிறோம். பல நேரங்களில் அங்கு சொல்லப்படுவதற்கு முற்றிலும் மாறாக நடப்பதையும் பார்க்கிறோம். வானிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால், அந்த வானிலை உருவாக்கும் மனநிலை நம் கட்டுப்பாட்டில் முற்றிலும் உள்ளது. கொட்டும் மழை ஒருவரை துயரத்தில் ஆழ்த்தும், மற்றோவரை குழந்தையாய் மாற்றி மழையில் விளையாட வைக்கும். எரிக்கும் வெயில் ஒருவருக்கு எரிச்சலூட்டும், மற்றொவருக்கு மகிழ்வைத் தரும். ஒரே மனிதருக்குள்ளும் மழையோ, வெயிலோ ஒரு நாள் மகிழ்வையும் வேறொரு நாள் சோகத்தையும் உருவாக்குவதில்லையா?
வானிலையைப் போலவே, வாழ்வின் நிகழ்வுகளையும் நம்மால் அதிகம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அந்நிகழ்வுகள் நம்மில் உண்டாக்கும் எண்ணங்கள், உணர்வுகள் இவைகள் முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு நிகழ்வு நடக்கும் போது, முக்கியமாக ஏமாற்றம் தரும், துயரம் தரும் ஒரு நிகழ்வு நடக்கும்போது, பொதுவாக நம்மில் வேதனையும், கோபமும் பெருமளவில் தோன்றும். காலம் செல்லச் செல்ல அதே நிகழ்வுகள் மனதில் அமைதியை, நன்றியை உருவாக்குவதும் நாம் வாழ்வில் அனுபவத்தில் உணர்ந்துள்ள பாடங்கள்தானே! நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும், நம்மை வந்தடையும் எல்லா அனுபவங்களும் 'நல்லவை' 'அற்புதமானவை' என்ற அட்டைகள் ஒட்டப்பட்டு வரும் பரிசுகள் அல்ல. பல நல்ல நிகழ்வுகள் துன்பம் என்ற மாறுவேடத்தில் வருகின்றனவே!

ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் - Blessing in disguise, அதாவது, மாறுவேடத்தில் வரும் ஆசீர்வாதங்கள். இந்த மாறு வேடத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், ஆசீர்வாதங்களையும் இழந்துபோகும் ஆபத்து உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தும் பல கதைகள் உண்டு.

Titanic என்ற கப்பலைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். அந்தப் புகழ்பெற்ற கப்பலில் பயணம் செய்தவர்கள், செய்யத் தவறியவர்கள் பற்றி பல கதைகள் உண்டு. அவைகளில் ஒன்று இது. ஸ்காட்லாந்தில் வாழ்ந்தது கிளார்க் (Clark) குடும்பம். கணவன், மனைவி, ஒன்பது குழந்தைகள். Titanic என்ற கப்பலில் பயணம் செய்து, அமெரிக்காவை அடைந்து அங்கு தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்று, கணவனும் மனைவியும் இரவு பகலாய் உழைத்து பணம் சேர்த்தனர். குழந்தைகளும் உழைத்தனர். பல ஆண்டுகள் சேர்த்த பணத்தைக் கொண்டு அனைவருக்கும் Passport மற்றும் பயணச்சீட்டு எல்லாம் வாங்கிவிட்டனர். பயணம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அவர்கள் கடைசிக் குழந்தையை ஒரு வெறி நாய் கடித்துவிட்டது. அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் வீட்டின் முன்கதவில் ஒரு மஞ்சள் காகிதத்தை ஒட்டிவைத்தார். அதாவது, அக்குடும்பத்தில் உள்ளவர்கள் பிறரோடு 15 நாட்களுக்குப் பழகக் கூடாது என்று தடை விதிக்கும் அறிவிப்பு அது. வீட்டுத் தலைவன் மனமுடைந்து போனார். ஒரு வாரம் கழித்து, Titanic கப்பல் கிளம்பிச் செல்வதைத் துறைமுகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. தன் கடைசி மகனையும், அவனைக் கடித்த நாயையும், இப்படி நடக்கும்படி செய்துவிட்ட கடவுளையும் ஒவ்வொரு நாளும் சபித்தார்.
Titanic கப்பல் கிளம்பி ஐந்து நாட்கள் சென்று, அக்கப்பல் மூழ்கியச் செய்தி வந்தது. உடனே கிளார்க் வீட்டுக்கு ஓடிச்சென்று தன் கடைசி மகனைக் கட்டியணைத்து, முத்தமிட்டு, அழுதார். கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், தன் மகனைக் கடித்த அந்த வெறி நாய்க்கும் அவர் ஒரு சிலை வடித்திருப்பார்.
 நம்மில் எத்தனை பேர் எத்தனை முறை மாறுவேடத்தில் வந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளோம்? கடவுளின் கருணை ஒவ்வொருவர் வாழ்விலும் பல வடிவங்களில் வருகின்றது. பல நேரங்களில் மாறுவேடங்களிலும் வருகின்றது. வெள்ளமென பாய்ந்து வருகிறது. பேரருவி என கொட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த அருவிக்குக் கீழ் நமது மனம் எனும் பாத்திரத்தை வைத்தால், அது எத்தனை பெரிய பாத்திரமாய் இருந்தாலும் ஒரு நொடியில் நிறைந்து விடும். எனவே, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாம் "எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது" என்பதை மட்டுமே சொல்லமுடியும். இப்படி ஒரு நிறைவில், பூரிப்பில் நாம் சொல்லும்போது, அதனால் மேலும் பலனடையப்போவது நாமே!







All the contents on this site are copyrighted ©.