2011-02-21 15:28:41

திருத்தந்தையின் மூவேளை ஜெப உரை.


பிப் 21, 2011. உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது மேற்கோள் காட்டிய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், நாம் நிறைவுள்ளவர்களாய் வாழ்வது என்பது தாழ்ச்சியில் கடவுளின் குழந்தைகளாக அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே ஆகும் என்றார்.

இறைவனைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டு அன்பு கூரும் ஒவ்வொருவரும் ஒரு புது துவக்கத்திற்கு தகுதியானவர்கள் என்ற பாப்பிறை, 'நாம் இறைவனின் ஆலயம், இறைவனின் ஆவி நம்முள் குடிகொண்டுள்ளது' என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால் நம் வாழ்வு செம்மைப்படுவதுடன் நம் சாட்சியமும் தெளிவானதாய், பலன்தர வல்லதாய் மாறும் என்றார்.

நம்மீது கொண்ட அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதற்காக மனிதனாக பிறப்பெடுத்த இயேசுவை நாம் பின்பற்ற, அவரின் வார்த்தைகளான 'உங்கள் எதிரிகளிடம் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்' என்ற அவரின் வேண்டுகோள் மீண்டும் எதிரொலிப்பதை நாம் செவிமடுக்கவேண்டும் என மேலும் கூறினார் பாப்பிறை.

இச்செவ்வாயன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழா பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, புனித பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் மேய்ப்பர் என்ற பணியை இன்றைய மேய்ப்பர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டியதையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.