2011-02-21 15:29:20

ஓர் இலட்சம் இந்தியக் கிறிஸ்தவர்களின் அமைதி ஊர்வலம்.


பிப் 21, 2011. கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டது தொடர்பான அரசின் அறிக்கைக்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக ஏறத்தாழ ஓர் இலட்சம் கிறிஸ்தவர்கள் மங்களூரில் அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

மங்களூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஏற்பாடுச் செய்திருந்த இவ்வூர்வலத்தில் 45 கிறிஸ்தவ சபைகள் மற்றும் தனியார் அமைப்புகளின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தையும் பொறுமையையும் புரிந்துகொண்டு அவர்களுக்கான நியாயத்தை அரசு வழங்கவேண்டும் என இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் குரு ஆல்வின் குலாசோ கூறினார்.

மங்களூரின் முக்கிய கிறிஸ்தவ பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்ற கிறிஸ்தவர்கள், தங்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டியவர்களாய், கைகளில் கறுப்புக் கொடியைத் தாங்கி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த ஊர்வலம் குறித்துப் பேசிய மங்களூர் ஆயர் அலோசியஸ் பால் டி சூசா, 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்களின் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை 100யும் தாண்டியிருக்க, அரசு அமைத்த விசாரணைக்குழுவோ, அவ்வெண்ணிக்கை 57 எனக் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.








All the contents on this site are copyrighted ©.