2011-02-19 16:23:51

திருச்சபையின் முக்கிய தகவல்கள் அடங்கிய திருப்பீட ஆண்டு புத்தகம் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


பிப் 19, 2011. தலைமைத் திருச்சபை மற்றும் அகில உலகத்திருச்சபையின் முக்கிய தகவல்கள் அடங்கிய திருப்பீட ஆண்டு புத்தகம் இச்சனியன்று திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருச்சபையின் புள்ளிவிவர மைய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு திருப்பீடச்செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்த்தோனேயால் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வாண்டு புத்தகம், திருமுழுக்குப்பெற்ற கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்டக்காலத்தில் உலக அளவில் 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.

2008ம் ஆண்டு 116 கோடியே 60 இலட்சமாக இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2009ல் 118 கோடியே 10 இலட்சமாக உயர்ந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் கத்தோலிக்க ஆயர்களின் எண்ணிக்கையும் 1.3 விழுக்காடு, அதாவது 5002 லிருந்து 5065 ஆக அதிகரித்துள்ளதாகவும் திருச்சபையின் ஆண்டு புத்தகம் தெரிவிக்கிறது.

மறைமாவட்ட மற்றும் துறவு சபை குருக்களைப் பொறுத்தவரையில் 2000க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து ஐயாயிரத்து நூற்று எழுபத்தெட்டு என்பதிலிருந்து 4 இலட்சத்து 10 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. மறைமாவட்ட குருக்களின் எண்ணிக்கை ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே குறைந்து வருவதாகவும், அதே வேளை துறவு சபை குருக்களின் எண்ணிக்கை ஆசியா மற்றும் ஆப்ரிக்கா தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் குறைந்து வருவதாகவும் திருப்பீடத்தின் 2011ம் ஆண்டு புத்தகத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையும் 2008ம் ஆண்டில் ஓர் இலட்சத்து 17 ஆயிரத்து 24 ஆக இருந்தது 2009 ம் ஆண்டில் ஓர் இலட்சத்து 17 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இவ்வெண்ணிக்கை குறைந்து வருகின்றபோதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவதே உலக அளவில் மொத்தமாக அதிகரிப்பதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.