2011-02-19 16:25:14

Waterloo போர்க்களத்தின் புகழ்பெற்ற ஒரு சிலுவை அண்மையில் திருடப்பட்டுள்ளது


பிப்.19,2011. Waterloo என்று அழைக்கப்படும் போரின்போது தீக்கிரையான ஒரு கோவிலில் அழியாமல் இருந்த ஒரு சிலுவை அண்மையில் திருடப்பட்டுள்ளது.

தற்போது பெல்ஜியம் என்று அழைக்கப்படும் நாட்டில், 1815ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போரில் நெப்போலியன் தோல்வியுற்ற Waterloo என்ற இடத்தில் ஆறடி உயரமுள்ள மரத்தால் ஆன சிலுவை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தீக்கிரையான அப்பகுதியில் மரத்தால் ஆன இச்சிலுவை எச்சேதமும் அடையாததால், ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாய் போற்றப்பட்டு வந்துள்ளது.

இன்னும் நான்கு ஆண்டுகளில் 2015ம் ஆண்டு இச்சிலுவையின் இருநூறாம் ஆண்டு சிறப்பிக்கப்பட உள்ள இவ்வேளையில் இச்சிலுவை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறதென்று இந்நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை திட்டமிடும் குழுவின் தலைவரான பிரித்தானிய படைத் தளபதி Sir Evelyn Webb-Carter கூறினார்.

ஆறடி உயரமும், 440 பவுண்டு எடையுமுள்ள இச்சிலுவையைத் திருடிச் சென்றவர்கள் இதைச் சேதப்படுத்தியுள்ளனர் என்பதற்கு சிலுவையில் இருந்து பெயர்ந்து விழுந்துள்ள ஒரு சில மரத் துண்டுகள் சாட்சி என்று இச்சிலுவையைப் பராமரித்து வரும் Yves Van Der Cruysen கூறினார்.

இச்சிலுவையைத் திருடிச் சென்றவர்கள் இதை எங்கும் விற்கமுடியாத பட்சத்தில், சமுதாயத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிதாப முயற்சியாக இதை தான் காண்பதாக Cruysen மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.