2011-02-18 15:26:04

சோமசேகரா குழுவின் அறிக்கைக்கு எதிராக பெங்களூருவில் ஆயர்கள் போராட்டம்


பிப்.18,2011. கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆயர்கள் 18 பேர் தலைமையில் பெங்களூருவில் இவ்வியாழனன்று போராட்டம் ஒன்று நடைபெற்றது.
கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 2008ம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு வன்முறை தாக்குதல்கள் குறித்து வெளியான B.K. சோமசேகரா குழுவின் அறிக்கை வெறும் கண்துடைப்பு என்றும், இத்தாக்குதல்கள் குறித்து CBI விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தும் வண்ணம் கர்நாடகா கத்தோலிக்க ஆயர்கள் அவையும், கர்நாடகா கிறிஸ்தவ ஒன்றிப்பின் மனித உரிமைகள் அமைப்பும் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.
தாக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் குற்றவாளிகள் என்றும், தாக்குதலை மேற்கொண்ட இந்து அடிப்படைவாதக் குழுவினர் குற்றமற்றவர்கள் என்றும் கூறும் இக்குழுவின் அறிக்கை நீதியைக் கேலிக்குரியதாக்குகிறதென்று பெங்களூரு பேராயர் Bernard Moras கூறினார்.
பெங்களூரு நகரின் மற்றொரு பகுதியில் அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் கழகம் இவ்வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த மற்றொரு போராட்டத்தில், அனைத்து கத்தோலிக்க, கிறிஸ்தவ குழுக்களைச் சார்ந்த 3000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று UCAN செய்தியொன்று கூறுகிறது.மேலும் வருகிற ஞாயிறன்று மங்களூரில் மற்றொரு கிறிஸ்தவப் பேரணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.