2011-02-17 15:25:06

இரஷ்ய அரசுத் தலைவரும் திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு


பிப்.17,2011. இரஷ்ய அரசுத் தலைவர் Dmitry Medvedev இவ்வியாழன் காலை 11 மணி அளவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டை வத்திக்கானில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பிற்குப் பின், இரஷ்ய அரசுத் தலைவர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனேயையும் சந்தித்தார்.
வத்திக்கானுக்கும், இரஷ்யாவுக்கும் இடையே 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழமையான அரசு உறவுகள் மீண்டும் நிலைநாட்டப்பட்டதன் பின், இரஷ்ய அரசுத் தலைவர் ஒருவர் திருத்தந்தையைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
இரு நாடுகளுக்கிடையேயான உறவு, ஐரோப்பிய பாதுகாப்பு, ஐ.நா.அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அகில உலக அரங்குகளில் வத்திக்கானும், இரஷ்யாவும் ஆற்றக் கூடிய முக்கிய பணிகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், உரோமைய கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையே உள்ள உறவுகள் இன்னும் ஆழப்படும் வழிகளையும் இரஷ்ய அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் பேசினார்.இச்சந்திப்பின் இறுதியில், இரஷ்ய அரசுத் தலைவர் மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் நகரின் ஓவியங்களையும், முன்னாள் இரஷ்ய அரசுத் தலைவர் Boris Yelstin திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் உட்பட பல நாட்டுத் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள் அடங்கிய இரு கோப்புகளையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மதக் களஞ்சியம் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். திருத்தந்தையும் இரஷ்ய அரசுத் தலைவருக்கு வத்திக்கான் பளிங்கு ஓவியம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.