2011-02-17 15:26:19

இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசாவுக்கு ஒரு தனிப்பட்ட பிரிவு ஆரம்பிக்கப்படும்


பிப்.17,2011. இந்தியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான IGNOU என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை தெரேசாவுக்கு ஒரு தனிப்பட்ட பிரிவு ஆரம்பிக்கப்படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இப்புதனன்று வெளியான இவ்வறிக்கையில், IGNOU பல்கலைகழகத்தில் உள்ள சமுதாயப் பணிகள் பள்ளியின் ஓர் அங்கமாக இப்பிரிவு விளங்கும் என்றும், HIV நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், வீதிச்சிறார் ஆகிய பலமிழந்த பல குழுவினரைக் குறித்த ஆய்வுகளை இப்பிரிவு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அன்னை தெரேசாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 26ம் தேதியை அகில இந்திய பிறரன்பு நாள் என்று அறிவிப்பதோடு, அந்நாளில் பிறரன்பில் தலை சிறந்த பணி புரிவோருக்கு ஒவ்வோர் ஆண்டும் பரிசுகள் வழங்கும் திட்டத்தையும் இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.அன்னை தெரேசாவுக்கும் இந்திய கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இது மாபெரும் சிறப்பு என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.