2011-02-16 16:07:40

மக்களாட்சி முறைப்படி எகிப்தின் வருங்காலம் அமைக்கப்படுவதே தங்கள் கனவு - கர்தினால் Antonios Naguib


பிப்.16,2011. மத அடிப்படையிலோ, இராணுவ அடிப்படையிலோ அரசு அமையாமல், மக்களாட்சி முறைப்படி எகிப்தின் வருங்காலம் அமைக்கப்படுவதே தங்கள் நம்பிக்கை, கனவு என்று அலேக்சான்றியாவின் முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறியுள்ளார்.
எகிப்தின் முன்னாள் அரசுத் தலைவர் ஹோஸ்னி முபாரக் பதவி துறந்ததை அடுத்து அங்கு நாட்டைக் கட்டுப்படுத்தி வரும் இராணுவத் தலைமைக்குத் தன் சிறப்பான ஆதரவைத் தெரிவித்துள்ளார், காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களின் தலைவர் கர்தினால் Naguib.
தற்போது பொறுப்பேற்றிருக்கும் இராணுவம், புதிய அரசை அமைக்கும் விதமாக, தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்திருப்பதைத் தான் பெரிதும் வரவேற்பதாகக் கூறிய கர்தினால், மக்களாட்சியை அமைக்கும் முயற்சியில் அந்நாட்டின் 200000 காப்டிக் கத்தோலிக்கர்களும் முழுமையாக ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எகிப்தின் தற்போதைய நிலையற்ற தன்மையால், மத அடிப்படைவாதத்தினர் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர் என்பது மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்று கூறிய கர்தினால் Naguib, எகிப்து நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கட்டுப்படுத்துவதை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, அந்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.கர்தினால் Antonios Naguibன் கருத்துக்களையே மின்யா மறைமாவட்ட ஆயர் இப்ராகிம் சிட்ராக்கும் Aid to Church in Need என்ற அமைப்புக்கு அண்மையில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.