2011-02-16 15:54:55

பிப்ரவரி 17. – வாழ்ந்தவர் வழியில்........,


ஜே. கே. என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இறந்து பிப்ரவரி 17, இவ்வியாழனோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. 1895ம் ஆண்டு மே மாதம் 12ந்தேதி ஆந்திரப் பிரதேசத்தின் மதனப்பள்ளி எனுமிடத்தில் பிறந்த ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர் என்ற வகையில் அறியப்படுகிறார். இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான மெய்யியல் ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தி வந்தவர்.

அவரின் படிப்பினைகள் அனைத்தும் இந்திய மண்ணின் வாசனையோடுதான் இருந்தன.

தியானம் என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. வாழும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தில் இருப்பதாக மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாடம்.

நிகழ்காலத்தில் மட்டும் வாழ வேண்டும். கடந்த காலம் என்ற பிணத்தையும், எதிர்காலம் என்ற மாயையும் சுமந்து கொண்டிருந்தால் மனம் துன்புறத்தான் செய்யும் என்பதை பல புத்தகங்களில், பல உரைகளில் விளக்கியுள்ளார்.

நான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்......ஆசை இருக்கும் இடத்தில் விழிப்புணர்வு இருக்காது.........உண்மைதான் விடுவிக்கும், முயற்சியோ செயலோ அல்ல. இவை ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களில் ஒரு சில துளிகள்.








All the contents on this site are copyrighted ©.