2011-02-16 16:08:29

நாட்டின் பட்ஜெட் திட்டங்கள் நன்னெறிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படவேண்டும் - அமெரிக்க ஆயர்கள்


பிப்.16,2011. நாட்டில் வரையறுக்கப்படும் பட்ஜெட் திட்டங்கள் வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் வரையறுக்கப்படக் கூடாது, மாறாக நன்னெறிகளின் அடிப்படையிலும் வரையறுக்கப்படவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் கத்தோலிக்கத் தலைவர்கள் 300 பேர் அடங்கியக் குழுவொன்று இச்செவ்வாயன்று வாஷிங்டன் மாநகரில் மக்களவையின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ள இக்கருத்தை ஒரு கடிதத்தின் மூலம் அவர்களுக்குத் தெரிவித்தனர்.
பொருளாதாரப் பின்னடைவு இன்னும் தீராத இச்சூழலில் அமெரிக்காவிலும், உலகெங்கும் உள்ள ஏழைகளை முன்னிறுத்தி பட்ஜெட் விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மனசாட்சியின் அவசியம் என்று அமெரிக்க ஆயர்கள் இக்கடிதத்தின் மூலம் கூறியுள்ளனர்.
பிற நாடுகளிடமிருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றுவது முக்கியமான ஒரு தேவை என்றாலும், நாட்டிற்குள் பாதுகாப்பு ஏதுமின்றி வாடும் ஏழைகளைப்பற்றி சிந்திப்பதும் சரிநிகரான ஒரு தேவை என்று ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆயர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், அமெரிக்க ஆயர் பேரவையின் அகில உலக நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவரான ஆயர் Howard Hubbard, உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றத்திற்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.