2011-02-16 15:53:41

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


பிப்ரவரி 16, 2011. வழக்கமான பிப்ரவரி மாத குளிருக்கு மாறாக மிதமான வெப்பத்தை அனுபவித்து வந்த உரோம் நகரம், செவ்வாய் இரவு மழைத்தூற துவங்கியதிலிருந்து புதன் காலை முழுவதும் மேகம் மூடிய வானத்தைக் கொண்டதாகவே இருந்தது. இந்தப் புதனன்று தன் வழக்கமான மறைபோதகத்தை முன்னிட்டு திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் திருப்பயணிகளைச் சந்தித்த பாப்பிறை 16ம் பெனடிக்ட், 16ம் நூன்ற்றாண்டைச் சேர்ந்த இஸ்பானிய கார்மல் சபை தியான யோகி புனித சிலுவையின் அருளப்பர் குறித்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

புனித சிலுவையின் அருளப்பர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். இளவயதிலேயே இவர் கார்மல் சபையில் இணைந்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின் இவர் அவிலாவின் புனித தெரேசாவைச் சந்தித்தது அவர்கள் இருவருக்குமே ஒரு முக்கிய தருணமாகும். கார்மல் சபையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை இருவரும் ஆராய்ந்தனர். அவிலா தெரேசா வாழ்ந்த துறவு இல்லத்தின் ஆன்மீகக் குருவாகப் பணியாற்றிய சிலுவையின் அருளப்பர், அவருடன் இணைந்து, ஆன்மீக வாழ்வில் இறைவன் எங்கனம் ஆன்மாக்களில் செயலாற்றுகிறார் என்பது குறித்த உன்னதமான, ஒரு தெளிவான போதனையை வடித்தார். தன் சபைக்குள்ளேயே இவர் துன்பங்களையும் தவறான புரிந்துகொள்ளுதலையும் எதிர்கொண்டாலும், மேற்கத்திய கலாச்சாரம் குறித்த மிகவும் உயரிய ஒளியூட்டும், உள்ளார்ந்த வழி காட்டும் ஆய்வுத் தொகுப்புகளை தந்துள்ளார். கார்மல் மலை ஏறுதல் (The Ascent of Mount Carmel), ஆன்மாவினுடைய காரிருள் இரவு (The Dark Night of the Soul), ஆன்மீகப் பாசுரம் (The Spiritual Canticle), அன்பின் வாழும் சுடரொளி (The Living Flame of Love) என்பவை புனித சிலுவை அருளப்பரின் முக்கிய நூல்கள். அவர் விளக்கப்படுத்தி விரிவுப்படுத்திய ஆய்வுப்பொருட்களுள் ஒன்று, ஆன்மாவின் தூய்மைப்பாடு. அதாவது, படைக்கப்பட்ட பொருட்களின் வழி நாம் இவ்வுலகில், உயிருள்ள இறைவனின் சுவடுகளைக் கண்டுகொள்ளலாம் என்பதாகும். இறைவனின் உள்ளியல்பை நாம் முழுவதுமாக உணர்ந்து கொள்ள விசுவாசம் ஒரு தலை சிறந்த வழி. தூய்மைப்படுத்தலுக்கான பாதையில் எதிர்நோக்கப்படும் வழிகள் சிலவேளைகளில் உயிரூட்டமுடையதாகவும், சிலவேளைகளில் மந்தமானதாகவும் இருந்தாலும் நமது உறுதியான முயற்சிகளை எதிர்நோக்குகின்றன. ஆனால் அங்கு கடவுளே உண்மையான மையமாக உள்ளார். மனிதன் செய்ய முடிந்ததெல்லாம், ஆன்மாவில் இறைவனின் அன்பு நிறை செயற்பாடுகளுக்கென தன்னை முற்றிலும் திறந்தவனாக்கி தாழ்மையுடன் கையளிப்பதாகும். இவ்வகையில், புனித சிலுவை அருளப்பர், ஆன்மீக முதிர்ச்சி நிலைக்கான பாதையிலான விசுவாச உறுதிப்பாட்டிற்கும் தாழ்மையுடன் கூடிய அர்ப்பணத்திற்குமான எடுத்துக்காட்டாய் நமக்கு உள்ளார். இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.