2011-02-16 16:07:25

குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துவதே வறுமையை நீக்கும் சிறந்த வழி - வத்திக்கான் அதிகாரி


பிப்.16,2011. குழந்தைகளின் நலனிலும், அவர்கள் முன்னேற்றத்திலும் முக்கிய கவனம் செலுத்துவதே வறுமையை நீக்குவதற்கும், எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் சிறந்த வழி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
"வறுமை ஒழிப்பு" என்ற கருத்தை மையமாகக் கொண்டு நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.கருத்தரங்கில் அண்மையில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாறு கூறினார்.
நாம் இன்று சந்திக்கும் சமுதாய, பொருளாதார பிரச்சனைகள் வருங்காலத்திலும் தொடராமல் இருக்கவும், அவைகளை வருங்காலத்தில் தீர்ப்பதற்கும் ஒரே வழியாக இருப்பவர்கள் இன்றைய குழந்தைகளே என்று கூறிய பேராயர், இன்று நிலவும் வறுமைக்கு குழந்தைகள் எவ்விதத்திலும் காரணம் இல்லை எனவும் எடுத்துரைத்தார்.
மக்கள் தொகை வளராமல் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், இன்று வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் மனித சமூகத்தின் சராசரி வயது அதிகரித்திருப்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று பேராயர் சுல்லிக்காட் கூறினார்.வறுமை ஒழிப்பு என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் பார்ப்பது தவறு என்றும், முழுமனித வளர்ச்சியிலேயே சமுதாய முன்னேற்றமும் அடங்கியுள்ளதென்றும் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுல்லிக்காட் தன் உரையின் நிறைவில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.