2011-02-14 16:14:56

பிப்ரவரி 15 வாழ்ந்தவர் வழியில் .....


உன்னையே நீ அறிவாய்! என்ற கூற்றைக் கேட்டவுடனே பளிச்சென்று மனதில் தோன்றுபவர் சாக்ரடீஸ். கி.மு. 470 முதல் கி.மு.399 வரை வாழ்ந்த கிரேக்க மெய்யியலாளரான இவர், மேற்கத்திய சிந்தனைகளுக்கு வித்திட்டவர். உயிரே போனாலும் உண்மையை மட்டும் இழக்க மாட்டேன் என்பதில் நெஞ்சுறுதி கொண்டிருந்தவர். இவரது பேச்சும் செயலும் எளிமையான பழக்கவழக்கங்களும் கிரேக்க இளைஞர்களை ஈர்த்தன. பல கடவுள்களை உருவாக்கியவர்களின் முன்னால் ஒன்றே கடவுள் என்றார். கிரேக்க அரசியல்வாதிகளிடம், அறிவுடையவனே ஆளத்தகுதி பெற்றவன் என்றார். போலி மதவாதிகளிடம் மரணம் என்பது வந்தே தீருமென்றால் அதைக்கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதனால் அதிகார வர்க்கத்தின் பகையைச் சம்பாதித்தார். இளைஞர்களைக் கெடுக்கிறான், தேசத்துரோகி, நாத்திகன் என்று குற்றம் சாட்டி எம்லாக் என்ற கொடிய விஷத்தை கொடுத்து சாகடிக்கும்படி கட்டளையிட்டது நடுவர் மன்றம். அந்த நாள் பிப்ரவரி 15, கி.மு.399 என்று சொல்லப்பட்டுள்ளது. நடுவர் மன்றத்தில் தனது வாதத்தை எடுத்து வைத்த சாக்ரடீஸ், சிறந்த பண்பு ஒன்றே எல்லாச் செல்வத்தையும் தரும் கருவி. இந்த எனது போதனை இளைஞர்களைக் கெடுக்கிறது என்று அரசு குற்றம் சாட்டினால், இந்தக் குற்றத்தை ஆயிரம் முறை செய்யத் தயாராக இருக்கிறேன். என்னை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தாலும் சரி விடுவிக்காமல் போனாலும் சரி என்னுடைய போதனைகளை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் என்றார். “எனககு விஷம் தயாராக இருககிறதா? விஷம் குடித்த பின்னர் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டு அதனை அஞ்சாமல் வாங்கிக் குடித்து மரணத்தைத் தழுவிய மேதை சாக்ரடீஸ். அவரது மரணத்தை அறிவித்த அவரது சீடர்கள், அவர் இறந்து விட்டார் என்று சொல்லவில்லை, ஆனால் ‘சாக்ரடீஸ் இன்று முதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’என்று கூறினர். அன்று ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.