2011-02-11 16:15:47

வத்திக்கான் வானொலி “எல்லைகளற்ற ஒரு பெரிய குடும்பம்”, கர்தினால் இலயோலோ


பிப்.11, 2011. வத்திக்கான் வானொலி “எல்லைகளற்ற ஒரு பெரிய குடும்பம்”, இது பலதரப்பட்ட கலாச்சார மற்றும் மொழியினரைக் கொண்டு இதில் ஒவ்வொருவரும் சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர், இவ்வாறு இது மாபெரும் அமைதியை ஏற்படுத்தும் சக்தியாகச் செயல்படுகின்றது என்று வத்திக்கான் நகர நாட்டு நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜொவான்னி இலயோலோ கூறினார்.

வத்திக்கான் வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் எண்பதாம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் அருங்காட்சியகத்தில், வத்திக்கான் வானொலி பற்றிய அருங்காட்சியகம் இவ்வியாழன் மாலை தொடங்கப்பட்ட நிருபர் கூட்டத்தில் இவ்வாறு பாராட்டினார் கர்தினால் இலயோலோ.

வத்திக்கான் வானொலி தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிகழ்வில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசிய கர்தினால் இலயோலோ, இந்த 2011ம் ஆண்டில் இரண்டு முக்கிய ஆண்டு நிறைவுகள் சிறப்பிக்கப்படுகின்றன என்றார்.

வத்திக்கான் சமூகத் தொடர்புத் துறையில் இரண்டு மிக முக்கியமான மற்றும் மிகவும் அறியப்பட்ட திருப்பீடச் சார்புத் தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ (L’Osservatore Romano) தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவும், வத்திக்கான் வானொலியின் எண்பது ஆண்டுகள் நிறைவும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றன என்றார் கர்தினால் இலயோலோ.

இத்தாலி ஒரு நாடாக ஒன்றிணைக்கப்பட்ட 1861ம் ஆண்டில் லொசர்வாத்தோரே ரொமானோ செய்தித்தாளும் தொடங்கப்பட்டது, இவ்வாண்டில் திருத்தந்தையரின் நாடுகளின் மீதான அதிகாரமும் முடிந்தது, இதனையொட்டி “உரோமன் கேள்வி” என்று நீண்ட காலமாக இருந்து வந்த தீர்க்கப்படாதப் பிரச்சனை குறித்து இத்தாலி மற்றும் ஐரோப்பிய மக்களுடன் திருப்பீடம் நடத்திய விவாதங்களின் குரலாக இத்தினத்தாள் செயல்பட்டது என்றார் அவர்.

வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்டதோடு வத்திக்கான் வானொலியும் உருவாக்கப்பட்டது என்றுரைத்த கர்தினால் இலயோலோ, இரண்டாம் உலகப் போர் காலத்திலும் சமய சுதந்திரம் மறுக்கப்பட்ட சர்வாதிகாரக் காலத்திலும், கம்யூனிசம் ஆட்சியிலிருந்த காலத்திலும் எனப் பல முக்கிய கட்டங்களில் நசுக்கபபட்டோர் மற்றும் உரிமை மறுக்கப்பட்டோருக்கானத் திருச்சபையின் குரலாக வத்திக்கான் வானொலி செயல்பட்டுள்ளது, தொடர்ந்து செயல்பட்டும் வருகிறது என்றார்.







All the contents on this site are copyrighted ©.