2011-02-11 16:16:56

பிப்ரவரி 12 - வாழ்ந்தவர் வழியில்........


இச்சனிக்கிழமை உயிரியல் அறிஞர் சார்ல்ஸ் டார்வின், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் பிறந்த நாள். ஆனால் இன்னொருவரைப்பற்றிப் பேச வருகின்றோம். தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்ட ஒருவரைப்பற்றி. கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்து பெப்ரவரி 12, 1908ல் காலமான ஜி. யு. போப் தான் அவர்.

வட அமெரிக்காவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஏப்ரல் 24, 1820ல் பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். விவிலியநூல் கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த ஜி. யு. போப், தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

தமிழ் மீது பெரும் பற்று கொண்டிருந்த அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.








All the contents on this site are copyrighted ©.