2011-02-10 16:12:17

வியட்நாமில் தொழு நோயாளர்கள் குடியிருப்புக்கு நடுவே திறக்கப்பட்ட ‘இறை இரக்கம்’ கோவில்


பிப்.10,2011. அண்மையில் கொண்டாப்பட்ட சீனப் புத்தாண்டையொட்டி, வியட்நாமில் அரசு நடத்தும் தொழு நோயாளர்கள் குடியிருப்புக்கு நடுவே கோவில் ஒன்று அவர்களுக்கெனத் திறக்கப்பட்டது.

Thani Binh மறைமாவட்டத்தின் ஆயர் Pierre Nguyen Van De அவர்கள் தலைமையில் 16 குருக்கள் நிகழ்த்தியத் திருப்பலியுடன் இறை இரக்கம் என்ற பெயர் தாங்கிய இக்கோவில் அர்ச்சிக்கப்பட்டது.

இறைவன் எங்கள் செபங்களுக்குத் தக்க பதில் அளித்துள்ளார் என்று Vincent Vu The Hung என்ற தொழுநோயாளர் ஒருவர் கூறினார். தாங்கள் இதுவரை பிற கோவில்களில் திருப்பலியில் பங்கேற்க செல்லும்போதெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும், தற்போது இறைவனை அருகில் காணும் பேறு பெற்றோம் என்றும் இந்நோயாளர் கூறினார்.

1900மாம் ஆண்டு அயல்நாட்டு மறைப்பணியாளர்களால் தொழு நோயாளருக்கென்று உருவாக்கப்பட்ட இந்தக் குடியிருப்பை 1954ம் ஆண்டு அரசு எடுத்துக் கொண்டது.

தொழுநோயாளர் பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Joseph Mai Tran Huynh இக்கோவிலில் தற்போது 1000 பேர் திருப்பலியில் பங்கு கொள்ள முடியும் என்றும், 20 மாதங்களாய் கட்டப்பட்ட இந்தக் கோவில், 2,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதென்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.