2011-02-10 16:10:32

பாகிஸ்தான் கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் "ஒரு லட்சம் விவிலிய நண்பர்கள்"முயற்சி


பிப்.10,2011. பாகிஸ்தானில், கராச்சி உயர்மரைமாவட்டத்தின் பல கோவில்களில் மாலை வேளைகளில் விவிலிய வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.

பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்க விவிலியக் கழகம் "ஒரு லட்சம் விவிலிய நண்பர்கள்" என்ற ஒரு முயற்சியைக் கடந்த ஆண்டு ஆரம்பித்தது.

கராச்சி உயர் மறைமாவட்ட பேராயர் Evarist Pinto இம்முயற்சியைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்து வருகிறார். கிறிஸ்தவர்களில் 60 விழுக்காட்டினர் வாசிக்கும் திறமை இல்லாதவர்கள்; இருந்தாலும், விவிலியத்தைக் கேட்கவும், அதன் விளக்கங்களைப் புரிந்துகொள்ளவும் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்று பேராயர் கூறினார்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் விவிலியத்தைத் தங்கள் உடமையாக்கவும், விவிலியத்தைத் தினமும் படிக்கவும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சியை கடந்த சில மாதங்களாகச் செய்து வருவதாக கத்தோலிக்க விவிலியக் கழகத்தின் செயலர் அருள் தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, ஆறு மறைமாவட்டங்களில் விவிலியம் வாசிக்கும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் முழுவதையும் இணைத்து ஒரு பெரும் விவிலிய மாரத்தான் நடைபெறும் என்றும் அருள்தந்தை எம்மானுவேல் அசி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.