2011-02-10 16:08:21

ஒப்புரவு அருட்சாதனத்தை எந்தக் கருவியின் மூலமாகவும் நிறைவேற்ற முடியாது - திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்


பிப்.10,2011. iPhone வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்புரவு அருட்சாதனம் குறித்த ஒரு வசதி, குருவிடம் நேரடியாகப் பெறும் இத்திருவருட்சாதனத்திற்கு எவ்வகையிலும் ஒரு மாற்று வழி அல்ல என்பதைத் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு Federico Lombardi கூறினார்.

"ஒப்புரவு அருட்சாதனம்: உரோமன் கத்தோலிக்க முறைகள்" என்ற பெயரில் இவ்வருட்சாதனம் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு வசதியை அமெரிக்காவில் iApps என்ற நிறுவனம் அண்மையில் வெளியிட்டது.

iPhone, iPod உள்ளவர்கள் இந்த வசதி மூலம் ஒப்புரவு அருட்சாதனத்திற்கு எவ்விதம் தங்களையே தயாரிப்பது, எவ்விதம் தங்கள் மனசாட்சியை பரிசோதிப்பது என்பவை குறித்த பல விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

ஒரு சில பத்திரிகை நிருபர்கள் இந்த வசதியைக் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளாமல், iPhone வழியாக இனி ஒப்புரவு அருட்சாதனத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறிவந்ததால், திருப்பீடம் தன் விளக்கத்தை இப்புதன் மாலை அறிவித்தது.

ஒப்புரவு அருட்சாதனம் என்பது, அருட்போழிவு செய்யப்பட்ட ஒரு குருவிடம் மனம் வருந்தி வரும் ஒருவர் தன் பாவங்களைக் கூறி, இறைவனின் மன்னிப்பையும் அருளையும் பெறும் ஒரு அருட்சாதனம் எனவே இத்திருவருட்சாதனத்திற்குக் கட்டாயம் இருவரும் நேரடியாகப் பிரசன்னமாகி இருக்க வேண்டும். வேறு எந்தக் கருவியின் மூலமாகவும் இந்த அருட்சாதனத்தை நிறைவேற்ற முடியாது என்று அருள்தந்தை லொம்பார்தி பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கினார்.

ஒப்புரவு அருட்சாதனம் குறித்த பல்வேறு புத்தகங்கள் இதுவரை வெளிவந்திருப்பது போல, இப்போது iPhone மூலமாகவும் இவ்வருட்சாதனத்தைக் குறித்த விளக்கங்கள் வந்துள்ளனவே தவிர, இந்த வசதி எவ்வகையிலும் அருட்சாதனமாகாது என்று திருபீடப் பேச்சாளர் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.