2011-02-09 15:37:51

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


பிப்ரவரி 09, 2011. உரோமைக்கு வருபவர்கள் இம்மாதத்தை பிப்ரவரி தான் என்று நம்ப மறுக்கிறார்கள் என்றால் மிகையில்லை. ஏனெனில், பிப்ரவரி என்பது வழக்கமாக உரோம் நகருக்கு குளிரின் உச்சகட்ட காலம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலநிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது இந்நகரம். எங்கும் சூரிய ஒளியின் தாக்கமும், குளிரின் குறைபாடும் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் பிப்ரவரி மாதம் வழக்கமாக காணாத ஒன்று. இப்புதனன்றும் திருத்தந்தையின் மறைபோதகத்திற்கு செவிமடுக்க திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் திருப்பயணிகள் பெருமெண்ணிக்கையில் குழுமியிருக்க, புனித பீட்டர் கனிசியுஸின் வாழ்வு குறித்து தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

ஹாலந்தில் பிறந்த புனித பீட்டர் கனிசியுஸ், தன் இள வயதிலேயே இலயோலாவின் புனித இஞ்ஞாசியாரின் துவக்க காலச் சீடர்களுள் ஒருவராக மாறினார். Cologneல் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்ற மூன்றாண்டுகளுக்குப் பின் மக்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க ரீதி மறுமலர்ச்சிக்காகவும், Ingolstadt பல்கலைக்கழகத்தின் கல்விதர மேம்பாட்டிற்காகவும் கடினமாக உழைத்தார் இப்புனிதர். Pragueன் கல்லூரியை நிறுவிய இவர், தென் ஜெர்மனியின் இயேசுசபை மாகாணத்தின் முதல் அதிபராகவும் நியமிக்கப்பட்டார். கத்தோலிக்க மறுமலர்ச்சியின் முக்கிய மையங்களாக மாறிய இயேசுசபை கல்லூரிகள் மற்றும் இயேசுசபை இல்லங்களை இங்கு இருந்துகொண்டே நிர்வகித்து வந்தார் புனித கனிசியுஸ். மறுமலர்ச்சியின் இந்த அமளி காலத்தில் இப்புனிதர் பல சமூக மற்றும் இறையியல் வாக்குவாதங்களில் கலந்துகொண்டார். விவிலியத் தூண்டுதலுடன் கூடிய பதிலுரைகளால் பிரபலமான மறைக்கல்வி மற்றும் பக்தி இலக்கியத்தை இவர் வெளியிட்டார். இவர் தன் கடைசி காலத்தில் சுவிட்சர்லாந்தின் Fribourgல் இருந்தபோது மறைப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து, எழுத்திற்கும் மறைப்போதகத்திற்கும் என தன்னை அர்ப்பணித்திருந்தார். திருத்தந்தை 13ம் லியோ, இவரை ஜெர்மனியின் இரண்டாவது அப்போஸ்தலராக அறிவித்தார். திருத்தந்தை பதினோராம் பத்திநாதர், பீட்டர் கனிசியுஸை புனிதராகவும் திருச்சபையின் மறைவல்லுனராகவும் அறிக்கையிட்டார். இவர் தன்னுடைய எண்ணற்ற பணிகளை எடுத்து நடத்துவதற்கானத் தூண்டுதலையும் பலத்தையும் இயேசுவின் இதயத்தின் மீதான பக்தி, தினசரி செபம் மற்றும் திருவழிபாட்டில் கண்டுகொண்டதான இவரின், கிறிஸ்துவை மையமாகக்கொண்ட ஆன்மீக எடுத்துக்காட்டு முதலாவதாக நிற்கின்றது. அடுத்ததாக, மறைக்கல்விக்கான அவரின் குறிப்பிடும்படியான பங்களிப்பை எடுத்துரைக்கலாம்.

இவ்வாறு, இயேசு சபை புனிதர் பீட்டர் கனிசியுஸ் குறித்து தன் மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.