2011-02-09 15:41:21

இறைவார்த்தைக்கு உரிய மரியாதையை வழங்காமல் இருப்பது ஐரோப்பியத் திருச்சபைக்கு பெரும் சவால் - கர்தினால் Mark Ouellet


பிப்.09,2011. இறைவார்த்தைக்கு உரிய மரியாதையை வழங்காமல் இருப்பது திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் இப்புதன் வரை மூன்று நாட்கள் நடைபெற்ற 'திருச்சபையில் திருவிவிலியம்' என்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Mark Ouellet இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் அடித்தளமான கிறிஸ்தவத்தைப் புறக்கணித்து விட்டு, உலகப்போக்கு அதிகம் பரவி வருவதால், ஐரோப்பிய கலாச்சாரமே வேரறுக்கப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்று கர்தினால் Ouellet சுட்டிக் காட்டினார்.
மதசார்பற்ற நிலை என்ற காரணம் காட்டி, கிறிஸ்தவம், விவிலியம் அனைத்தும் புறந்தள்ளப்படுவதால், திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பலவித சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.இஸ்பானிய ஆயர் பேரவை விவிலியத்தின் புதிய மொழிபெயர்ப்பை, தகுந்த அறிவியல் ஆராய்ச்சிகளுடன் மேற்கொண்டுள்ளதைப் பாராட்டிய கர்தினால் Ouellet, ஸ்பெயினின் இந்த முயற்சி பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்குமென்றும், இறைவார்த்தை ஐரோப்பிய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.