2011-02-08 15:36:49

வன்முறைகள் முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக சூடான் ஆயர் கவலை.


பிப் 08, 2011. சூடானில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால வன்முறைகள், தென் சூடான் சுதந்திர நாடாக உருவெடுப்பதற்கான முயற்சிகளில் பெரும் அச்சுறுத்தலைத் தருவதாக உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் Eduardo Hiiboro Kussala.

வன்முறையின் அச்சுறுத்தலை இவ்வாறே தொடர்ந்து எதிர்நோக்கி வந்தால், தென்சூடானில் அமையவிருக்கும் புதிய அரசு தன் வளங்களையெல்லாம் இவ்வன்முறை தடுப்பு நடவடிக்கைகளுக்கே செலவிடவேண்டிய சூழல் உருவாகும் என்ற ஆயர், இதனால் இந்த புதிய நாட்டின் வருங்காலம் பெருமளவில் பாதிக்கப்படும் என மேலும் கூறினார்.

தென்சூடானின் குழந்தைகளுள் பெரும்பான்மையினோர் இன்னும் LRA புரட்சியாளர்களின் கைகளில் இருப்பதாகவும் அவர்களின் நிலை குறித்து எவ்விதத் தகவலும் இல்லை எனவும் கூறும் ஆயர் Hiiboro Kussala, புரட்சியாளர்களின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் கூட, அவர்கள் அனுபவித்த மனக் காயங்களால் தங்கள் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளனர் என்றார்.

சூடானிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுப்பதற்கானத் தென் சூடானின் அண்மைக் கருத்து வாக்கெடுப்பில் 98 விழுக்காட்டினர் தனி நாடு கொள்கைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதி இவ்வாண்டு ஜூலையில் ஆப்ரிக்கக் கண்டத்தின் 54வது சுதந்திர நாடாக உருவெடுக்க உள்ளது.








All the contents on this site are copyrighted ©.