2011-02-08 15:49:53

பிப்ரவரி 09வாழந்தவர் வழியில்...


1737ம் ஆண்டு பிப்ரவரி 9ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தவர் தாமஸ் பெய்ன். (Thomas Paine - மறைவு: ஜூன் 8, 1809). தனது 37ம் வயதில் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு தனது புரட்சிகரமான எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் அமெரிக்கப் புரட்சியை வலுவடையச் செய்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
"அப்பட்டமான உண்மை" (Plain Truth) என்ற பெயரில் 1775ல் இவர் எழுதிய ஒரு சிறு நூல் அதற்கடுத்த ஆண்டு "நடைமுறை அறிவு" (Common Sense) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிரித்தானியா என்ற சிறு தீவு அமெரிக்க ஐக்கிய நாடு எனும் பெரும் கண்டத்தை ஆள்வது மடைமை என்பதை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் காரண காரியங்களோடு இந்நூலில் விளக்கினார் தாமஸ் பெய்ன்.
பிரெஞ்ச் புரட்சி ஆரம்பமான 1789ம் ஆண்டு இவர் பிரான்சுக்குச் சென்று அந்தப் புரட்சிக் காலம் முழுவதும் பிரான்சில் தங்கினார். இவருக்குப் பிரெஞ்ச் மொழி தெரியாதபோதும், இவரது எண்ணங்களால் ஈர்க்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் இவரைத் தங்கள் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தனர்.அடிப்படையில் மனித விடுதலை, புரட்சி, நீதி ஆகிய எண்ணங்களை உலகில் விதைத்தவர்களில் தாமஸ் பெய்ன்னும் ஒருவர்.







All the contents on this site are copyrighted ©.