2011-02-07 15:55:08

பிப்ரவரி 08 வாழ்ந்தவர் வழியில் .....


ஒரு சமயம், தனது ஒரே மகனை இழந்த ஒரு விதவைத் தாய், தனது மகனுக்கு உயிர் பிச்சை அருளுமாறு புத்தரிடம் அழுதழுது கேட்டார். அப்போது புத்தர், நான் உன் மகன் மீண்டும் உயிர் பெற்றெழச் செய்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் நீ ஊருக்குள் சென்று எவருமே இறக்காத வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வா என்று அந்தத் தாயிடம் சொல்லி அனுப்பினார். அந்தத் தாயும் ஊர் முழுவதும் அலைந்து வீடு வீடாய்க் கேட்டார். இறப்பே இடம் பெறாதக் குடும்பங்களை அவரால் காண முடியவில்லை. எனவே வெறுங்கையோடு புத்தரிடம் திரும்பினார் அந்தத் தாய். இந்நிகழ்ச்சி மூலமாக புத்தர் ஒரு பெரிய போதனையையே நிகழ்த்தினார். இந்த உலகில் நிலையானது எதுவுமில்லை என்றார் புத்தர்.

கிழக்கு ஆசியாவில் மஹாயான புத்த மதத்தினர், பிப்ரவரி 8ம் தேதியை நிர்வாண நாளாகச் சிறப்பிக்கின்றனர். இந்த நாளில் புத்தரின் உயிர் இந்த உலகைவிட்டுப பிரிந்ததை நினைவுகூருகின்றனர். மேலும், இந்நாளில் அம்மதத்தினர் தங்களது இறப்பு மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் இறப்பு பற்றியும், இவ்வுலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற புத்தரின் போதனைக் குறித்தும் ஆழமாகச் சிந்திக்கின்றனர். சில மேற்கத்திய புத்தமதக் குழுக்களும் பிப்ரவரி 8ம் தேதியன்று இந்நாளைச் சிறப்பிக்கின்றனர். இருந்த போதிலும் புத்தரின் இறப்பு நாளை நிர்வாண நாளாகப் பலர் பிப்ரவரி 15ம் தேதியன்றும் சிறப்பிக்கின்றனர். கி.மு.566ல் பிறந்த சித்தார்த்தன் என்ற பெயரைக் கொண்ட புத்தர் தனது 80வது வயதில் கி.மு.486ல் உயிர் நீத்தார்.

“ஆசையே துன்பத்திற்கு அடிப்படைக் காரணம், தன் சுய துக்கத்தில் மனம் செலுத்துபவன் பிறருடைய துன்பங்களை உணர்வதிலிருந்தும் தன் துக்கத்தை வெற்றி கொள்வதிலிருந்தும் தடுக்கப்படுகிறான்” என்ற தத்துவத்தை உலகுக்குப் போதித்தவர் புத்தர்.







All the contents on this site are copyrighted ©.