2011-02-07 15:21:49

நவீன உலகில் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து திருத்தந்தையின் கருத்து


பிப்.07,2011. இன்றையக் காலக்கட்டத்தில் எதிர்கொள்ளப்பட வேண்டியதாக திருச்சபைக்கும் அதன் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கும் சவால்களான கல்வி மற்றும் பயிற்சி பற்றி சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து கத்தோலிக்கக் கல்விக்கான திருப்பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டோருக்கு இத்திங்களன்று உரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உண்மை எனும் ஒளி இழக்கப்பட்டு, உண்மையை எடுத்துரைப்பதே ஆபத்தானதாகக் கருதப்பட்டு, இதனால் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்த சந்தேகம் எழும் இன்றைய நவீன உலகில் கல்விப்பணி என்பது சிரமம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை.
மனிதன் மற்றும் இன்றைய உண்மை தன்மை குறித்த கிறிஸ்தவக் கண்ணோட்டத்தால் தூண்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், கல்வி கற்பித்தலை ஓர் அன்பின் செயல்பாடாகவும், அறிவை வழங்கும் பிறரன்பு நடவடிக்கையாகவும், பொறுப்பு, அர்ப்பணம், நிலையானத்தன்மை ஆகியவைகளை உள்ளடக்கியவைகளாகவும் ஏற்று செயல்படுவது, இன்றைய கல்விப் பிரச்னைகளுக்கு சிறந்த பதில் மொழியாக உள்ளது எனவும் கூறினார் பாப்பிறை.தூரங்களை குறைத்து மக்களை ஒருவர் ஒருவரோடு இணைத்துக் கொண்டுவரும் பன்வலைத்தளங்கள் திருச்சபைக்கு வழங்கி வரும் உயரிய வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, அவைகள் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது கல்விக்கு மட்டுமல்ல, மேய்ப்புப்பணி மற்றும் நற்செய்தி அறிவித்தலுக்கும் சிறந்த முறையில் உதவக்கூடும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.