2011-02-07 15:21:59

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : உண்மையான ஞானம் இருளின் மத்தியில் வாழ்வுக்குப் பொருள் தருகின்றது


பிப்.07,2011. கிறிஸ்தவர்கள் உண்மையான ஞானத்தைப் பரப்புவதன் மூலம் இருளை ஒழிக்கலாம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய நீங்கள் உலகின் உப்பு, நீங்கள் உலகின் ஒளி ஆகியத் திருச்சொற்களைக் கொண்ட ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்து, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உப்பு என்பது, கூட்டமைப்பு, தோழமை, வாழ்வு, ஞானம் போன்ற மதிப்பீடுகளை அன்றைய கலாச்சாரத்தில் கொண்டிருந்தது எனவும், இத்தகைய பண்புகளுக்குத் தம் சீடர்கள் சாட்சிகளாய்த் திகழ வேண்டுமென இயேசு விரும்பினார் எனக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒளியானது, வாழ்வின் ஊற்றும் படைத்தவருமான கடவுளின் முதல் வேலையாக இருந்தது எனவும் கூறினார்.ஒருவர் பசித்திருப்போருக்கு உதவி செய்து நொறுங்குண்ட இதயத்தைத் திருப்தி படுத்தும் போது இருளிலிருந்து ஒளி தோன்றுகின்றது என்ற எசாயா இறைவாக்கினர் பகுதியையும் குறிப்பிட்ட அவர், இயேசுவின் சீடர்கள், இறைஞானத்தோடு சேர்ந்து உலகை ஊழலிலிருந்து பாதுகாத்து அதற்குப் புதிய மணம் கொடுப்பதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றார்.







All the contents on this site are copyrighted ©.