2011-02-07 15:58:02

இயற்கை இறைவனின் இணையில்லா ஓவியம்.


பிப்.07,2011. யானை ஒன்று தெரு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த யானைப் பாகன் ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அதனை நிறுத்த, மக்கள் அதற்குப் பணமும், பழமும், காய்கறிகளும், தேங்காயும் எனப் பல பொருட்களைக் கொடுத்து கும்பிட்டனர். இருந்தாலும் காட்டில் நடக்கும் போது யானைக்கு இருக்கும் கம்பீரம் ஊர்த் தெருவில் நடக்கும் போது இல்லை. இந்த யானையைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் சொல்கிறார்....

“தெருவில் நடந்ததால் மனிதர்கள் மத்தியில் நடக்கிறோம் என்று யானைக் கூனிக்குருகி விட்டது. பட்டம் கட்டிப் பவனி வந்த மிருகத்தைக்கூடப் பிச்சை எடுக்கும்படிச் செய்து விட்டோமே!. “யானைப் படுத்தால் குதிரை மட்டம்” என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நாம் அதைக் குழியில் அல்லவா படுக்க வைத்து விட்டோம். சிங்கங்களைக்கூடக் கூண்டில் அடைத்து அவற்றின்மீது சிறுவர்கள் கல்லெறிந்து மகிழும்படியாக அல்லவாச் செய்து விட்டோம். தந்தம் இருந்தால்தானே நம்மைக் கொல்கிறார்கள். எனவே இந்தத் தந்தமே வேண்டாம் என்று சில யானைகள் சின்ன வயதிலேயே மரத்தில் உராய்ந்து தந்தமே வளராமல் பார்த்துக் கொள்கின்றனவாம். களிறுகள் பிளிறுவதை விட்டு விட்டு அலறுவதற்கு ஆரம்பிக்குமளவு மனிதனின் விரல்களில் விஷம் தடவப்பட்டுள்ளது”

மனிதன் எத்தனையோ பேரழிவுகளைக் கண்ட பின்னும் இயற்கையின் மடியில் கை வைப்பதை மட்டும் நிறுத்துவதற்குத் துணிந்ததாகத் தெரியவில்லை. நாம் வாழும் இக்காலத்தைப் பார்க்கும் போது முதலில் இயற்கை சிணுங்கியதுபோல் தெரிந்தது. நாள் ஆக ஆக அது சீறத் தொடங்கியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதி மற்றும் விக்டோரியா தென் மாநிலம் ஒரு வாரத்திற்கு முன்னர் யாசி (Yasi) கடும் புயலால் பாதிக்கப்பட்டிருக்க, தற்சமயம் அந்நாட்டின் மேற்குப் பகுதியில் பரவியுள்ளக் காட்டுத் தீ, மணிக்கு எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கும் காற்றினால் தீவிரமடைந்து சுமார் அறுபது வீடுகளை அழித்துள்ளது. இஞ்ஞாயிறன்று சீனாவின் ஜீஜியாங் மாகாணத்திலும் காட்டுத் தீயில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடும் பனிப்பொழிவு. இலங்கையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்துவரும் கன மழை காரணமாக சுமார் பத்து இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவை போன்று இன்னும் பல நாடுகள் இயற்கையின் சீற்றத்தில் சிக்கியுள்ளன.

காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவது இந்த மாதிரியான இயற்கைப் பேரழிவுகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். வேளாண்மை மட்டுமே பெரிதாக இருந்த காலம் மாறி தொழிற்புரட்சி தொடங்கிய போது உலகெங்கும் காடுகளின் பேரழிவும் ஆரம்பமானது. "எல்லாம் வளர்ச்சிக்காகத்தான்" என்று காடுகளின் அழிவும் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் கடுமையான விளைவுகளை மனிதகுலம் இப்பொழுது சந்திக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் காடுகள் 33 விழுக்காடாவது இருந்தால்தான் அந்த நாடு நீர் வளம், நில வளம், மக்கள் நலம் ஆகியவற்றோடு சிறப்பாக வாழ முடியும். எனவே காடுகளைப் பாதுகாக்கவும், காட்டுப் பகுதிகளை அதிகரிக்கவுமென ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்த 2011ம் ஆண்டை அனைத்துலக காடுகள் ஆண்டாகக் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், பூமியைப் பாதுகாக்க வேதியப் பொருள்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் இந்த 2011ம் ஆண்டை அகில உலக வேதியல் ஆண்டாகவும் ஐ.நா. அறிவித்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை (பிப்.2) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்தக் காடுகள் ஆண்டின் நிகழ்வில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், காடுகள் அழிக்கப்படுவதால் சுற்றுச் சூழலுக்கும், நாடுகளின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்பை உலக அளவில் மக்களுக்கு எடுத்துச் சொல்வதே இவ்வாண்டின் முக்கிய நோக்கம் என்றார். இந்நிகழ்வில் பேசிய, காடுகள் பற்றிய ஐ.நா.கருத்தரங்கின் இயக்குனர் Jan McAlpine, இவ்வுலகில் வாழும் அனைத்து 700 கோடிப் பேரின் உடல், பொருளாதார மற்றும் ஆன்மீக நலன் நமது காடுகளின் அமைப்பைப் பொறுத்துள்ளது என்றார். இதில் உரையாற்றிய ஐ.நா.சுற்றுச்சூழல் திட்ட இயக்குனர் Achim Steiner, காடுகள் நமது பொருளாதாரத்தின் மூலைக்கல், இவற்றின் உண்மையான மதிப்பீடு, நாடுகளின் தேசிய இலாப நஷ்டங்களில் காணக்கிடக்கின்றது என்று கூறினார்.

உலகின் நிலப்பரப்பில் சுமார் 31 விழுக்காடு அதாவது சுமார் நானூறு கோடி ஹெக்டேர்கள் காடுகளாகும். கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ஹெக்டேர் காட்டுப் பகுதி இயற்கைப் பேரிடர் அல்லது மரங்கள் வெட்டப்பட்டதால் அழிக்கப்பட்டுள்ளன. ஆயினும், FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வெப்பமண்டல நாடுகள் பகுதிகள் என 233 இடங்களில் கடந்த பத்தாண்டுகளில் காடுகளின் அழிவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரேசிலும் இந்தோனேசியாவும்தான். 1990களில் மிகுந்த அளவில் காடுகளை அழித்து வந்த இந்த இரண்டு நாடுகளிலும் காடுகள் அழிப்புக் குறைந்து வருகின்றது. அதேசமயம், சீனா, இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் புதிய மரங்கள் நடுவது அதிகரித்துள்ளதால் ஆண்டுதோறும் எழுபது இலட்சம் ஹெக்டேர் பகுதி காடுகள் அதிகரிப்பதற்கு வழி அமைத்துள்ளன.

இருந்த போதிலும், கடந்த பத்து ஆண்டுகளில் தென் அமெரிக்கா 40 இலட்சம் ஹெக்டேர் காடுகள் பகுதியையும் ஆப்ரிக்கா 35 இலட்சம் ஹெக்டேர் காடுகள் பகுதியையும் இழந்துள்ளன. இதற்கு உணவு, எரிபொருள், ஆலைகளுக்கென மரம் வெட்டுதல், விளைச்சல் நிலமாக்கப்படுதல், வீடுகள் கட்டப்படுதல், சரியானப் பராமரிப்பின்மை போன்றவற்றைக் காரணங்களாகச் சொல்லுகிறது FAO ஐ.நா. நிறுவன அறிக்கை.

RealAudioMP3 உலகின் காடுகளும் காட்டு மண்ணும் நூறாயிரம் கோடிக்கு மேற்பட்ட கரியமிலவாயுவைச் சேமித்து வைத்துள்ளன. இது இப்புவி மண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை விட இரண்டு மடங்கு அதிகம். எனினும், புவி வெப்பமடைவதற்குக் காரணமாகும் உலக பசுமை வாயு வெளியேற்றத்தின் இருபது விழுக்காட்டு அளவிற்குக் காடுகள் அழிவு காரணமாகின்றது.

இந்த 2011ம் ஆண்டு காடுகள் ஆண்டாகக் கடைபிடிக்கப்படுவதை வரவேற்றுப் பேசிய IUCN என்ற அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு இயக்குனர் Julia Marton-Lefèvre, பருவமழைக் காடுகளைப் பாதுகாக்காமல் இருந்தால் மனித சமுதாயம் எதிர்நோக்கும் வறுமை, புவி வெப்பமடைதல் போன்ற தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றார்.

RealAudioMP3 காடுகள் இந்தப் புவியின் நுரையீரல்கள். ஏனெனில் உலகினருக்குத் தேவையான நாற்பது விழுக்காட்டு பிராணவாயு மழைக்காடுகளிலிருந்துதான் கிடைக்கின்றது. நவீன மருந்துகளில் 25 விழுக்காட்டுக்கு மேல் காடுகளின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் ஆண்டுக்கு 10,800 கோடி டாலரை ஈட்டித் தருகின்றன. உலகின் சுமார் நான்கில் ஒரு பகுதியினர் அதாவது 160 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வு ஆதாரங்களுக்குக் காடுகளை நம்பியிருக்கின்றனர். உலகில் சுமார் முப்பது கோடி மக்களுக்கும், எண்பது விழுக்காட்டு பல்லின உயிரினங்களுக்கும் காடுகளே வீடுகளாக உள்ளன. காடுகள் கொண்டுள்ள ஏராளமான கரியமில வாயுக்களால் புவி மண்டலம் வெளியேற்றும் கரியமில வாயுவைக் குறைக்க முடியும். இதனால் 2010க்கும் 2020க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 3.7 டிரில்லியன் டாலரைச் சேமிக்கலாம். உலக வங்கியின் கணிப்புப்படி, காட்டுப் பொருள்களின் வியாபாரம் சர்வதேச அளவில் 27 ஆயிரம் கோடி டாலராகும்.

இந்தக் காடுகள் ஆண்டின் நல்ல தொடக்கமாக, சுமார் 200 அரசுகள் காடுகளைப் பாதுகாப்பதற்கு உறுதி அளித்திருப்பதாகவும் Julia Marton-Lefèvre கூறினார். அரசுகளின் இந்த அறிவிப்பு, ஓர் இனிப்பு செய்தியாக இருக்கின்றது. அன்பர்களே, இன்றைய நிகழ்ச்சியில் நிறையப் புள்ளி விபரங்களை வழங்கினோம். இவை காடுகளால் ஏற்படும் நன்மைகள், அவை அழிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும். காடுகள் ஆயிரக்கணக்கான உயிர்களின் இருப்பிடம், மூலிகைகளின் சுரங்கம். நாம் உண்ணும் பல தாவரங்களின் மூல விதை இன்னும் காடுகளில் காணப்படுகிறது. ஆனால் காடுகளின் அழிவால் தினமும் நூறு வகையான உயிரினங்கள் வீதம் இந்தப் பூமி இழந்து வருகிறது.

மனிதர்களால் இன்னும் கண்டுபிடிக்கபடாத பல வகை தாவரங்களும், விலங்குகளும் காடுகளில் இருக்கின்றன. அவை அழிந்து விடும் சூழலும் உருவாகியுள்ளது. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் 508 வகைப் பறவைகளும், 127 வகைப் பாலூட்டிகளும், 176 வகை ஊர்வன இனங்களும், 218 வகை மீன்களும், 338 வகை வண்ணத்துப்பூச்சிகளும், 200 வகை சிலந்திகளும், 8,400௦௦ வகை தாவரங்களும் காணப்படுகின்றன. இத்தகு அரிய உயிர்ச்சூழல் உள்ள பகுதிகள் உலகில் மிகச் சிலவே உள்ளன.

மனிதன் இயற்கையை அழிப்பதன் மூலம் தனக்குத்தானே கேடு வருவித்துக் கொள்கிறான். காடுகள் இல்லாத உலகைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? மனிதனின் சுவாசத்திற்கும் நல மற்றும் நல்வாழ்வுக்கும் ஆதாரமான இந்தக் காடுகளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவைத்தான் பிரித்துப் பார்க்க முடியுமா? நிலம் வாழ, நீர் வாழ. மரம் வாழ, செடி வாழ, நம் தலைமுறைகள் தழைத்து வாழ.... இயற்கை காக்கும் நம் பணிகளை வத்திக்கான் வானொலி அன்பர்களே தீவிரப்படுத்துவோமா இந்த அனைத்துலக காடுகள் ஆண்டில்! இயற்கை இறைவனின் இணையில்லா ஓவியம். இயற்கையில் உள்ள ஒவ்வொன்றுமே அதன் எல்லாவித ஆற்றலையும் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றுமே மறைந்திருக்கும் ஒரே ஒரு உயிரின் தோற்றம் என்றார் அமெரிக்கக் கவிஞர் ரால்ஃப் வால்டேர் எமர்சன்.








All the contents on this site are copyrighted ©.