2011-02-04 17:18:31

வட ஆப்ரிக்க ஆயர்கள் : டுனிசியா மற்றும் எகிப்தின் தற்போதையப் போராட்டங்கள் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கானவை


பிப்.04,2011. டுனிசியா மற்றும் எகிப்தில் தற்போது இடம் பெற்று வரும் போராட்டங்கள் சுதந்திரம் மற்றும் மனித மாண்புக்கானப் போராட்டங்கள் என்று வட ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை அல்ஜியர்ஸ் நகரில் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

டுனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, லிபியா, மேற்கு சஹாரா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் அல்ஜியர்ஸ் நகரில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்துவதில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வறுமை மற்றும் சர்வாதிகாரிகளின் ஊழல்களின் பாதிப்புக்களால் இடம் பெற்று வரும் இப்போராட்டங்கள் அரசியல் அமைப்புகளையே அசைத்துள்ளன என்றும் கூறும் ஆயர்களின் அறிக்கை, முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து போராடுவது சர்வதேசப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறுகின்றது.

எகிப்தில் சுமார் முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை வெளியேற்றும் நாளாக இவ்வெள்ளியன்று தலைநகர் கெய்ரோவில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்ட்டதில் இறங்கினர்.

மேலும், ஏமனிலும் சுமார் 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபர் Ali Abdallah Saleh பதவி விலக வேண்டும், சனநாயகச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சானா நகரில் இப்புதனன்று இருபதாயிரத்துக்கு அதிகமானோர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.