2011-02-04 17:13:42

திருத்தந்தை - திருமண முறிவு விவகாரங்கள் நீதியுடன்கூடியத் திறமையுடன் கையாளப்பட வேண்டும்


பிப்.04,2011. திருச்சபை நீதிமன்றங்கள், திருமண முறிவு விவகாரங்களைக் கையாளுவதில் நீதியுடனும் துரிதமாகவும் திறமையுடனும் செயல்படுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

Apostolic Signatura என்ற கத்தோலிக்கத் திருச்சபையின் உச்ச நீதிமன்றம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐம்பது பிரிதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு தெரிவித்தார்

கத்தோலிக்கத் திருச்சபை, கத்தோலிக்கரின் திருமண முறிவுகளை அங்கீகரிப்பதில்லை, மாறாக, கணவனோ மனைவியோ குழந்தைகளைக் கொண்டிருக்க மறுத்தாலோ, சரியான திருமணத்திற்கு உளவியல் ரீதியாகத் தகுதி இல்லாமல் இருந்தாலோ.. இவை போன்ற சூழல்களில் விவாகரத்துக்களைத் திருச்சபை ஏற்கின்றது என்று அவர் கூறினார்.

திருமணம் எனும் திருவருட்சாதனத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து நியாயமான சந்தேகங்கள் எழும் போது இந்த ஐயப்பாடு குறித்தத் தேவையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், இதனால் திருச்சபை சட்டத்தை முழுவதுமாக மதிக்கும் தலத்திருச்சபை நீதிமன்றங்கள் தேவை என்றும் கூறினார் அவர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் மேலான நீதிபதியாகிய திருத்தந்தை, தலத்திருச்சபை நீதிமன்றங்களுக்குப் போதுமான அளவில் ஆட்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பகுதியிலும் தலத்திருச்சபை நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு Apostolic Signatura க்கு உள்ளது என்பதையும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.

செபம், பிறரன்பு, மன்னிப்பு, தபம் ஆகிய ஆன்மீக ஆயுதங்கள் மூலம் அநீதிகள் முதலில் களையப்பட வேண்டும், எனினும் சில விவகாரங்கள், விசாரணைகள் வழியாகத் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றன என்று கூறினார் திருத்தந்தை.

பேச்சுவார்த்தைகள் மூலம் விசாரிக்கப்படுவது நல்லிணக்கத்திற்கும் ஒப்புரவுக்கும் வழி அமைக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கத்தோலிக்கத் திருச்சபையின் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய பணிகள் குறித்து எடுத்துரைத்தத் திருத்தந்தை, திருச்சபை நிர்வாகத்தில் உண்மையான நீதி கடைபிடிக்கப்படுவதை மேற்பார்வையிடும் இந்த நீதிமன்றத்தின் பொறுப்பு பற்றியும் வலியுறுத்தினார்.

திருச்சபையின் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதோடு திருச்சபை சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இந்நீதிமன்றம் கொண்டுள்ளது என்ற திருத்தந்தை, தலத்திருச்சபை அதிகாரிகளுக்கும் விசுவாசிகளுக்கும் இடையே நீதியும் ஒழுங்கும் கொண்ட உறவுகள் அமைவதையும் கவனிக்க வேண்டும் என்றார்.

Apostolic Signatura என்பது கத்தோலிக்கத் திருச்சபையில் உயரிய நீதித்துறை அமைப்பாகும். இது திருச்சபையில் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது.







All the contents on this site are copyrighted ©.