2011-02-04 17:20:12

கென்யாவில் புலம் பெயர்ந்த மக்களின் நலனில் அக்கறை காட்டுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள்


பிப்.04,2011. ஆப்ரிக்க நாடான கென்யாவில் 2008ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இடம் பெற்ற வன்முறையின் போது நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த மக்களின் நிலைமைகளை அரசு கவனத்தில் கொள்ளுமாறு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் அரசை மீண்டும் கேட்டுள்ளனர்.

இந்த வன்முறை முடிவுற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், இந்தப் புலம் பெயர்ந்த மக்களின் துன்பமும் நோய்களும் வறுமையும் ஏமாற்றங்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் பேராயர் சக்கேயுஸ் ஒக்கோத் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது அடிப்படையான மாண்பு மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறான் என்று கென்ய அரசியல் அமைப்பு எண் 28 கூறுவதைச் சுட்டிக் காட்டும் அவ்வறிக்கை, புலம் பெயர்ந்த மக்கள் மீதான அரசின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் அமைப்பை மீறுவதாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறது.

கென்யாவில் 2007ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு 2008ல் இடம் பெற்ற வன்முறையில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பெருமளவான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.