2011-02-03 16:05:12

பிப்ரவரி 04 - வாழ்ந்தவர் வழியில்.....


சத்யேந்திர நாத் போஸ். இளவயது முதற்கொண்டு நீண்ட நேரம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர். இயற்பியல், வேதியியல், கனிமயியல், உயிரியல், மண்ணியியல், மெய்பொருளியியல், அகழ்வாய்வு இயல், நுண்கலைகள், இலக்கியம் எனப் பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தவர். பன்மொழிப் புலமையையும் கொண்டிருந்தவர். கணிதத் துறையில் தேர்ச்சி பெற்ற போஸ் 1916ல் கல்கத்தா பல்கலைகழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார். புதுப் புதுச் செய்திகளை மாணவர்க்குச் சொல்லி வந்த இவர், நொபெல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய சார்பியல் கொள்கை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை விவரித்தார். அத்துடன் அக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். ஐன்ஸ்டீனுடைய பாராட்டையும் பெற்றார். ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து குவாண்டம் (quantum) புள்ளியியல் விதி விரிவுபடுத்தப்பட ஒத்துழைத்தார். விரிவுபடுத்தப்பட அந்த விதி தற்போது போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் என்று அழைக்கப்படுகிறது. போஸ், ஐன்ஸ்டீனுடைய சோதனைக் கூடத்தில் ஆராய்ச்சியை நடத்திய போதுதான் நுண்ணனு இயற்பியலுக்குரிய எல்லா அடிப்படை மூலக்கூறுகளையும் பிரிப்பதற்கான Nuclear Physics வழியைப் வகுத்தார். புதிதாக அமைந்த அந்த இரு பெரும் பிரிவுகளில் ஒன்றைப் போசோன்கள் என்று போஸ் பெயராலும் ஃபெர்மியன்கள் என்று மற்றொரு அறிவியலாளர் பெயராலும் அழைக்கப்பட்டது. ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகியூரி என்ற உலகப் புகழ் பெற்ற அறிவியலாளரோடு பணியாற்றியிருக்கிறார். வேதியியல் சோதனை மூலம் சல்போனாமைடினுடைய மூலக்கூறின் உள்ளமைப்பைக் கண்டறிந்து அதை மருத்துவக் கூட்டுப் பொருளாக மாற்றிக் கண் நோய்க்குப் பயன்படும் கண் சொட்டு மருந்தாக மருத்துவ உலகிற்கு வழங்கினார். இவர் 1944ல் இந்திய தேசிய அறிவியல் காங்கிரசின் தலைவராக இருந்தார். இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1954ல் பத்மவிபூஷன் என்ற விருதையும் இந்திய அரசு கொடுத்து கவுரவித்தது. 1956ல் தேசியப் பேராசிரியராகவும் ஆக்கப்பட்டார். இவை போன்ற இன்னும் பல பெருமைகளுக்கு உரிய கணிதவியல் மற்றும் இயற்பியல் மேதையுமான சத்யேந்திர நாத் போஸ், 1894ம் ஆண்டு சனவரி ஒன்றாந்தேதி கல்கத்தாவில் பிறந்தார். 1974ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இறைபதம் அடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.