2011-02-03 15:36:17

திருத்தந்தை : ஐரோப்பியக் குடும்பங்கள் மீது அக்கறை


பிப்.03,2011. கலாச்சாரம், வரலாறு மற்றும் மக்களின் தினசரி வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தின் நற்பண்புகள் வேரூன்றப்பட்டிருக்கும் ஆஸ்திரிய நாட்டில் பல்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் ஒன்றிணைந்த அமைதி வாழ்வைக் கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான ஆஸ்திரிய நாட்டின் புதிய தூதர் அல்போன்சோ குளோசிடமிருந்து இவ்வியாழனன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, ஆஸ்திரியாவின் பழைய நாட்டுப் பண்ணில் காணப்படும், “ஒன்றிப்பிலேயே வல்லமை உள்ளது” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளில் அரசுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் ஒருவித பதட்டநிலை காணப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சமய சுதந்திரத்தை மதிப்பதன் மூலம் சமூகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தடையின்றி இடம் பெற உதவுகிறோம் என்ற திருத்தந்தை, கல்வி நிறுவனங்கள் பிறரன்பு அமைப்புகள் மூலமானத் திருச்சபையின் பணிகளையும் சுட்டிக் காட்டினார்.அரசு நிர்வாகத்திலிருப்போர் குடும்பங்கள் குறித்தத் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தி சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு குடும்பம் மற்றும் திருமணத்திற்கான அரசின் சிறப்புப் பாதுகாப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஆஸ்திரிய தூதர் அல்போன்சோ குளோசிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.