2011-02-03 15:37:56

எகிப்தில் நடைபெற்றுவரும் போராட்டம் இஸ்லாமிய-கிறிஸ்தவ ஒன்றிப்பை பறைசாற்றுவதாய் உள்ளது - கத்தோலிக்க காப்டிக் ரீதி கர்தினால்


பிப்.03,2011. எகிப்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டில் மாற்றம் தேவை என்பதை உலகறியச் செய்துள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக எகிப்தின் கெய்ரோ நகரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கும் போராட்டம், அந்நாட்டின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக மாற்றியுள்ளதென்று எகிப்திற்கான வத்திக்கான் தூதர் பேராயர் Michael Fitzgerald, CNA செய்தி நிறுவனத்திற்குத் தொலைபேசி வழியே கூறினார்.
இந்தப் போராட்டங்களில் மதத்தின் சாயல் எதுவும் இல்லையென்றும், இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பேராயர் Fitzgerald கூறினார்.
தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் இஸ்லாமிய-கிறிஸ்தவ ஒன்றிப்பை பறைசாற்றுவதாய் உள்ளதென்று கத்தோலிக்க காப்டிக் ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Antonios Naguib கூறினார்.இந்தப் போராட்டத்தைக் காரணமாகக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் எகிப்தில் பரவும் ஆபத்து உள்ளதென்று அரசியல் ஆய்வாளர்கள் கூறும் வேளையில், இதுவரை இப்போராட்டத்தில் மத சார்பானவை எதுவும் காணப்படவில்லை என்று கர்தினால் Naguib குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.