2011-02-02 15:15:30

திருத்தந்தையின் குரோவேஷியத் திருப்பயணத்தை முன்னிட்டு ஆயர்கள் அறிக்கை


பிப்.02,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற ஜூன் 4,5 தேதிகளில் குரோவேஷிய நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு அந்நாட்டின் 21 ஆயர்கள் இணைந்து மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்

குரோவேஷியத் தலத்திருச்சபை முதல் முறையாக நடத்தும் தேசிய கத்தோலிக்க குடும்பங்கள் மாநாட்டில் கலந்து கொள்வதே திருத்தந்தையின் இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அந்நாட்டில் திருமணம் மற்றும் குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியுள்ளனர்

வேலைவாய்ப்பின்மை, தீர்க்கப்படாதக் குடியிருப்புப் பிரச்சனைகள் போன்ற சமூகப் பிரச்சனைகளால் பெருமளவான குரோவேஷிய இளையோர் திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

அதிகரித்து வரும் திருமண முறிவுகள், வீட்டு வன்முறை, குடிப்பழக்கம், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்தல் போன்றவை திருமண மதிப்பீடுகளை வெளிப்படையாய்ப் புறக்கணிக்கின்றன என்று கூறும் ஆயர்களின் அறிக்கை, அந்நாட்டின் தேசியக் குடும்ப மாநாடு ஆரோக்யமான குடும்பங்கள் உருவாக உதவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.